25 இடங்களில் நில வகைபாடு மாற்ற சி.எம்.டி.ஏ., முடிவு
சென்னை ; சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நில வகைபாடு மாற்ற கோப்புகள் தொடர்பாக முடிவுகள் எடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குழும கூட்டம் நடத்தப்படும்.இந்த வகையில், சி.எம்.டி.ஏ.,வின், 283வது குழும கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது.இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், தனியார் கோரிக்கை அடிப்படையில், நில வகைபாடு மாற்றம் செய்வது தொடர்பான கோப்புகள் மீது விவாதம் நடந்தது. இதில், 25க்கு மேற்பட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.இதேபோல், நிர்வாக ரீதியாக டெண்டர்கள் வழங்குவது, ஏற்கனவே வழங்கப்பட்ட டெண்டர்களில் தொடர்புள்ள திட்டங்களின் மதிப்பை திருத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.