குத்தம்பாக்கம் கடைகள் ஒதுக்கீடு தனியாரிடம் தருகிறது சி.எம்.டி.ஏ.,
சென்னை: குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை ஒதுக்கும் பொறுப்பை, தனியாரிடம் மொத்தமாக சி.எம்.டி.ஏ., கொடுக்க முடிவு செய்துள்ளது. சென்னை பெருநகரில், சி.எம்.டி.ஏ., சார்பில் செயல்படுத்தப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கனி சந்தை வளாகம் ஆகியவற்றில் கடைகள் ஒதுக்கீட்டை சி.எம்.டி.ஏ., மேற்கொண்டது. குறிப்பிட்ட கால குத்தகை அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன. மாதவரம் பேருந்து நிலையத்திலும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்தான் கடைகள் ஒதுக்கீட்டை கவனித்தனர். இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டபோது, அதன் பராமரிப்பு பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவானது. அப்போது, பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு, விளம்பரங்கள் அமைப்பது என, அனைத்து பொறுப்பும் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பித்து கடைகள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருமழிசை அருகில் உள்ள குத்தம்பாக்கத்தில், 24 ஏக்கர் நிலத்தில், 427 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த வளாகம் திறக்கப்பட உள்ளது. இங்கு, மொத்த பரப்பளவில், 12,685 சதுர அடி பரப்பில், 100 முதல் 200 சதுர அடி பரப்பிலான, 45 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாக பராமரிப்பு, கடைகள் ஒதுக்கீடு, விளம்பரங்கள் என அனைத்தையும், 15 ஆண்டுகளுக்கு தனியாருக்கு ஒப்படைக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்கான தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.