அரசு விரைவு பஸ் ஜப்தி கோயம்பேடில் சலசலப்பு
கோயம்பேடு, அரசு விரைவு பேருந்தை, சாலையில் 'ஜப்தி' செய்ததால், கோயம்பேடில் சலசலப்பு ஏற்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், 25 ஆண்டுகளுக்கு முன், அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார்.அப்போது சில காரணங்களை முன்வைத்து, பணியிட நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின், நீதிமன்றம் சென்று மீண்டும் அவர் பணியில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல், 20 ஆண்டுகளாக போக்குவரத்து கழக அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர்.இது குறித்து, பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில், நிலுவை தொகையில் வழங்க வேண்டிய 11.34 லட்சம் ரூபாயை, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என, ஐந்து மாதங்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது.இதுவரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, அரசு போக்குவரத்து கழகத்தின் வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்தை 'ஜப்தி' செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின் அடிப்படையில், கோயம்பேடில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய அரசு சொகுசு பேருந்தை, நீதிமன்ற ஊழியர்கள், நேற்று முன்தினம் திடீரென நிறுத்தி, நீதிமன்ற ஆணையை ஒட்டி பேருந்தை பறிமுதல் செய்தனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணியர், சாலையில் இறங்கி அடுத்த பேருந்தில் சென்றனர்.