உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒப்பந்ததாரர் ஊதியம் வழங்காததால் பணியாளர்கள்...ஓட்டம்! சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணி முடக்கம்

ஒப்பந்ததாரர் ஊதியம் வழங்காததால் பணியாளர்கள்...ஓட்டம்! சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணி முடக்கம்

காஞ்சிபுரம் :சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை பணிக்கான அவகாசம் முடிந்து இரு மாதங்களாகியும், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை நிறைவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊதியம் கிடைக்காமல் பணியாளர்கள் தொடர்ந்து வெளியேறுவதால், சாலை திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னையில் இருந்து பெங்களூரு வரை, தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல, ஏழு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, சுங்குவார்சத்திரம், கோவிந்தவாடி, பாணாவரம், ராணிப்பேட்டை வழியாக பெங்களூரு செல்வதற்கு, அதிவிரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து, நான்கு மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.சாலை பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, 2012ம் ஆண்டு, சிவன்கூடல், மொளச்சூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி, நெமிலி, பாணாவரம் ஆகிய கிராமவாசிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடத்தினர்.

நிதி ஒதுக்கீடு

அடுத்தக்கட்டமாக, 2016ம் ஆண்டு சாலை பணிக்காக, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நிலங்களை கையகப்படுத்தினர். இப்பணிக்கு, 7,406 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.இதில், 3,477 கோடி ரூபாய் கட்டுமானப் பணிக்கும்; 3,929 கோடி ரூபாய் நிலங்களை கையகப்படுத்தவும் ஒதுக்கப்பட்டு உள்ளது.அதிவிரைவு சாலைக்கு, புதிய சாலை போடுவதற்கு, 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் மண் மாதிரிகளை சேகரிக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் செய்தனர்.முதற்கட்டமாக, கூத்தவாக்கம் ஏரி, மேல்பொடவூர், மணியாட்சி, கோவிந்தவாடி ஏரி ஆகிய இடங்களில் உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றன.இதையடுத்து, உயர்மட்ட பாலங்கள் மற்றும் அந்த உயரத்திற்கு ஏற்ப, மண் சாலை அமைக்கும் பணியை, அந்தந்த சாலை போடும் ஒப்பந்தம் எடுத்தவர்கள் செய்து வருகின்றனர்.

அரைகுறை பணி

சித்துார் - ராணிப்பேட்டை வரை, ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை - காஞ்சிபுரம் வரை, காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வரையில், 105 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதில், 51.07 கி.மீ., துாரம் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளன.இதில், ஏரிகளில் சாலை போடும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. உதாரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மகேந்திரவாடி, உளியநல்லுார் ஆகிய கிராமங்களில் 'பில்லர்' போடும் பணி அரைகுறையாக உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி, சிறுவாக்கம் ஆகிய பகுதிகளில் பாலங்களில் இணைப்பு ஏற்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன.ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் முடிக்க வேண்டிய சாலை பணிகள், நிதி நெருக்கடியால் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் திணறி வருகிறது. ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.கட்டுமானத் தொழிலாளர்கள் லாரி ஓட்டுனர், நிர்வாக ஊழியர்கள் என, 300 பேர் வேலை செய்து வந்தனர். இந்த தொழிலாளர்களுக்கு, காலை, பகல், இரவு ஆகிய நேரங்களில் உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவு வழங்குவதையும், ஒப்பந்த நிறுவனம் குறைத்து விட்டது. ஊதியமும் கிடைக்கவில்லை; சாப்பாட்டுக்கும் வழியில்லை என்ற நிலை ஏற்பட்டதால், கட்டுமானத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள் என, 100 பேர் தங்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

ராட்சத இயந்திரம்

பருவமழையால் பாதிப்பு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால், சென்னை- - பெங்களூரு இடையே, அதிவிரைவு சாலை போடும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது.இதுகுறித்து, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க அதிகாரிகள் கூறியதாவது:தென்மேற்கு பருவமழையால், பணிகள் பாதிக்கப்பட்டன. வடகிழக்கு பருவ மழை முன் கூட்டியே துவங்கியதால், ஏரி மற்றும் ஏரி ஒட்டிய பகுதிகளில் ராட்சத இயந்திரங்களை இயக்க முடியவில்லை. இதனால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.நிறைவு செய்த பணிகளுக்கு ஏற்ப நிதியை விடுத்துள்ளோம். பருவமழைக்குப் பின், மேம்பாலம் கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ