உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தகவல் கிடைக்காத மனுதாரருக்கு இழப்பீடு: கோவை மாநகராட்சிக்கு உத்தரவு

தகவல் கிடைக்காத மனுதாரருக்கு இழப்பீடு: கோவை மாநகராட்சிக்கு உத்தரவு

கோவை : தகவல் அறியும் உரிமை சட்டத்தில், 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்காததால், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, கோவை மாநகராட்சிக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கோவை, சின்னவேடம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., தெய்வசிகாமணி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 'கோவை மாநகராட்சி 43, 44வது வார்டு இணையும் இடத்தில் மணியன் காளியப்ப சின்னம்மாள் வீதியின் கடைசியில் உள்ள 'ரிசர்வ் சைட்', நகர ஊரமைப்பு துறைஅனுமதியின் படி, எந்த உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்டது, அவ்விடத்தில் தற்போது என்ன உள்ளது, தண்ணீர் தொட்டி கட்டப்படுகிறது என்றால், பொது உபயோக இடத்தில் தண்ணீர் தொட்டி கட்ட உத்தரவிட்ட கடித நகல், தண்ணீர் தொட்டியின் மதிப்பீடு குறித்து தகவல் வேண்டும்' என்பது உட்பட 10 தகவல்களை கேட்டு,மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்துக்கு, 2023 ஜன., 16ல் மனு அனுப்பினார்.மனுவுடன், 2022 டிச., 15ல் 'தினமலர்' நாளிதழில் புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தியை, இணைத்திருக்கிறார். மாநகராட்சி பொது தகவல் அலுவலர் பதிலளிக்கவில்லை.2023 பிப்., 27ல் மேல்முறையீடு செய்தார். அதன்பின், மாநகராட்சி தரப்பில் மூன்று முறை பதில் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஜூன் 6ல் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருக்கிறார்.இதுதொடர்பாக, மாநில தகவல் ஆணையர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக சமீபத்தில் விசாரணை நடந்தது. மாநகராட்சி மேற்கு மண்டல நிர்வாக அலுவலர் லட்சுமணன் பங்கேற்றார்.விசாரணையில், தகவல் அறியும் உரிமை சட்டப்படி, 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது. தகவல் வழங்காததற்கு அப்போதைய பொது தகவல் அலுவலராக இருந்த சேகரிடம் விளக்கம் கோர, ஆணையம் முயற்சித்தபோது, ஓய்வு பெற்றிருப்பது தெரியவந்தது. அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.அதேநேரம், மனுதாரர் தரப்பில் புகார் மனு அளித்ததால், இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாயை, 10 நாட்களுக்குள் மாநகராட்சி வழங்க வேண்டும்; இழப்பீடு பெற்றதற்கான சான்றை மனுதாரரிடம் பெற்று டிச., 18க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'பொது தகவல் ஆணையம் உத்தரவுக்கேற்ப, மனுதாரருக்கு மாநகராட்சியில் இருந்து இழப்பீடு தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தகவல் அளிக்காத அதிகாரி, வருவாய்த்துறையில் இருந்து அயல் பணியாக மாநகராட்சிக்கு வந்தவர் என்பதால், கலெக்டர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, அவரது ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, மாநகராட்சிக்கு வழங்க அறிவுறுத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ