ஆட்டோ ஓட்டுநரை வெட்டியோர் கைது கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சவுகர் சாதிக், 35; ஆட்டோ ஓட்டுநர். இவரது வீட்டின் முன், வியாசர்பாடியைச் சேர்ந்த கேசவன், நேற்று தன் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். இதை சவுகர் சாதிக் தட்டிக்கேட்ட போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, கேசவன் மற்றும் அவரது தம்பி டிராவிட் குமார் ஆகியோர், கத்தியால் சவுகர் சாதிக்கின் கையை வெட்டி தப்பினர். விசாரித்த கொடுங்கையூர் போலீசார், வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த கேசவன், 25, டிராவிட் குமார், 23 ஆகியோரை நேற்று கைது செய்தனர். மாணவியிடம் அத்துமீறியவரிடம் விசாரணை செம்பியம்: பெரம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு, காலை உணவு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் உணவை வழங்க நேற்று முன்தினம் வந்த துாய்மை பணியாளர், அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும், 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து தகவலறிந்த பள்ளி முதல்வர், குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின், மாணவியின் பெற்றோர் அருகில் உள்ள, செம்பியம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, மகளிர் போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த குணசேகரன், 53, என்கிற துாய்மை பணியாளரை காவல் நிலையம் அழைத்து வந்து 'போக்சோ' வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தொழிலாளர்களிடம் போன் திருட்டு கொடுங்கையூர்: மாதவரம், கே.கே.ஆர்.டவுனைச் சேர்ந்தவர் ரசூல், 34; கட்டட மேஸ்திரி. இவர், கொடுங்கையூர், அருள் நகரில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 10 நபர்களை வைத்து, கட்டுமான இடத்திலேயே தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று தொழிலாளர்கள் மூன்று பேரின் மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது ஓட்டேரி: ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில், வாலிபர் ஒருவர் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், பழைய வாழைமா நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 21, என்பது தெரிந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யாவை, ஓட்டேரி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். 33 கிலோ குட்கா பறிமுதல் ராயபுரம்: ராயபுரம், எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள திரையரங்கம் அருகே, போலீசார் நேற்று கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சாக்கு பையுடன் நின்றிருந்த, காசிமேடைச் சேர்ந்த கமல், 42, என்பவரை பிடித்தனர். மூட்டையில் 33 கிலோ குட்கா இருந்தது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கமலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.