தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது: விடுமுறை நாளில் அலை அலையாக வந்த மக்கள்
சென்னை; சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும், 'தினமலர்' நாளிதழின் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில், விடுமுறை நாளான நேற்று மக்கள் அலை அலையாக குடும்பத்துடன் குவிந்தனர். 'தினமலர்' நாளிதழ் மற்றும், 'சத்யா' நிறுவனம் சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, கடந்த 1ம் தேதி துவங்கியது. இன்று நிறைவடைய உள்ளது. கண்காட்சியின் மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை மகிழ்ச்சியோடு வாங்கியும் சென்றனர். பேட்டரி கார் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தின் வாகன நிறுத்தத்தில், வாகனங்களில் இருந்து இறங்கும் முதியோரை, கண்காட்சி அரங்கிற்கு அழைத்துச் செல்ல, 'பேட்டரி கார்' வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், முதியோர் சிரமமின்றி செல்ல முடிகிறது. பெண்கள் தங்களுக்கு தேவையான, புடவைகள், பல்வேறு டிசைன்களுடன் கூடிய பிளவுஸ், குர்த்தி, பேன்ட், டாப், குழந்தைகளுக்கான குரோசே பின்னல் உடைகள், ஆடவருக்கான பேன்ட், ஷர்ட்டுகளை ஆர்வமுடன் தேர்வு செய்தனர். குழந்தைகள் தங்களுக்கான மேஜிக் செட், விளையாட்டு பொருட்கள், எழுதுபொருட்கள், வண்ணக்கலவைகள், கிளே, ஸ்லைம் உள்ளிட்டவற்றையும், பொம்மை கார்கள், துப்பாக்கிகள் போன்றவற்றையும் ஆர்வமுடன் வாங்கினர். வாகனங்கள் அரங்கில், பிரபல கார், பைக் நிறுவனங்களின் ஸ்டால்களில், வாகனங்களை, 'புக்' செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏராளமானோர் வாகனங்கள் குறித்து விசாரித்தனர். சிலர் வாகனங்களை, 'புக்'கிங் செய்தனர். ஒட்டகத்தை கட்டிக்கோ குழந்தைகளுக்கான விளையாட்டரங்கில், ஒட்டக சவாரி குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது. இரண்டு ஒட்டகங்களில் குழந்தைகள் ஆர்வமுடன் சவாரி சென்றனர். இது தவிர மிதவைப்படகு, மிதவை பலுான், சுழலும் காளை என, ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள், குழந்தைகளை மட்டுமின்றி, பெரியவர்களையும் கவர்ந்தன. உணவு அரங்கில், பன் புரோட்டா, நுால் புரோட்டா, இலை புரோட்டா, அத்தோ வகைகள், பிரியாணி வகைகள், சிறுதானிய உணவுகள், பனியாரம், போளி, திணை பாயசம், ஐஸ்கிரீம், மீன் உணவு போன்றவை, பார்வையாளர்களின் வயிற்றுப் பசியை போக்கின. உணவை ரசித்தபடி, மேஜிக் ேஷாக்களையும் பலர் ஆர்வமுடன் ரசித்தனர். எலக்ட்ரானிக்ஸ் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சியின், முதல் அரங்கான, 'சத்யா'வில், வழக்கமான ஆடி தள்ளுபடியுடன், கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால், கண்காட்சிக்கு வந்தவர்கள், தங்களுக்கு பிடித்த, 'டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மொபைல் போன்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தேர்வு செய்தனர். அறைகலன்கள் பொருட்காட்சியில் சிறிய பொருட்கள் வாங்கினால், எடுத்துச் செல்வது எளிது என்பதால், பெரிய பொருட்களை வாங்குவதை பலரும் தவிர்ப்பது வழக்கம். ஆனால், ஆல்பா பர்னிச்சர் அரங்கில், மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. காரணம் வாங்கும் பொருட்களை, இலவசமாக அவர்களின் வீடுகளுக்கே எடுத்துச் சென்று வழங்கினர். இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன், பல்வேறு அறைகலன் பொருட்களை ஆர்டர் செய்தனர். அதிலும், 'கிங் சைஸ்' கட்டில், ஷோபா, டிரெஸ்சிங் டேபிள், வார்ட்ரோப், சைடு டேபிள் உள்ளிட்டவற்றை தனித்தனியாகவும், செட், செட்டாகவும் தேர்வு செய்தனர். அத்துடன், தேக்கு மரத்தில் செய்து, கையால் கலைவண்ணம் தீட்டப்பட்ட அறைகலன்கள் இடம் பெற்றுள்ள, 'கிங்ஸ் கலெக்ஷன்ஸ்' கடையிலும், 5 சீட்டர் ஷோபா, சென்டர் டேபிள், சைடு டேபிள் உள்ளிட்டவை ஒரு செட்; டைனிங் டேபிள், 3 பேர் அமரும் ஊஞ்சல், ேஷாபா, காபி டேபிள், உள்ளிட்டவை ஒரு செட் என, பல செட்களாக விற்பனைக்கு உள்ளன. கிரைண்டருக்கு... கோவை லட்சுமி கிரைண்டர் அரங்கில், 3 லிட்டர் கிரைண்டருக்கு, ஒரு லிட்டர் மசாலா மாவு டிரம், சப்பாத்தி பிசைவது, தேங்காய் துருவல் உள்ளிட்ட பொருட்கள் கூடுதலாக வழங்கப்பட்டதால், அங்கும் மகளிர் கூட்டம் நிரம்பி வழிந்தது. அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களில், 1.5 லிட்டர், 3 லிட்டர், 5 லிட்டர் அளவுள்ள குக்கர்கள், 3 பர்னர், 2 பர்னர் காஸ் ஸ்டவ்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ள பேரட் நிறுவன அரங்கில், 5 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுவதால், பலரும் அவற்றை வாங்கி சென்றனர். புகையில்லா சமையலறை சப்பாத்தி செய்யும் போதும், மசாலா வதக்கும் போதும் வெளியாகும் புகையும், வெப்பமும், சமைக்கும் மகளிரை மூச்சு வாங்க வைக்கும். இதற்கு தீர்வு காணும் சிம்னிகளை, வகை வகையாக காட்சிக்கு வைத்துள்ளது 'பேபர்' நிறுவனம். அங்கு, ஹாப், குக்டாப், பில்டின் ஓவன், டிஷ் வாஷர், வாட்டர் ஹீட்டர், பியூரிபையர் உள்ளிட்டவையும் உள்ளதால், விலை விசாரித்து, செய்முறை விளக்கம் கேட்டு, பிடித்ததை ஆர்வத்துடன் பலர் ஆர்டர் செய்தனர். மனை சென்னையின் புறநகர் பகுதிகளில், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் உள்ளோர், 'ஜி ஸ்கொயர்' அரங்கில், விலையையும் இடத்தையும் விசாரித்து, புக் செய்ய நாள் குறித்து சென்றனர். சென்னை மக்களை கவர்ந்த கண்காட்சி, இன்று இரவுடன் நிறைவடைய உள்ளது. வியக்க வைக்கும் அரங்குகள் பார்வையாளர்கள் பெருமிதம் எதிர்பார்த்ததை விட கண்காட்சி அரங்குகள் சிறப்பாக உள்ளன. 'எல்.இ.டி., டிவி, வாஷிங் மிஷனில் துவங்கி, கார், பைக், மூலிகை பொருட்கள், தின்பண்டங்கள், பெண்களுக்கான ஆயத்த ஆடை, அலங்காரப் பொருட்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம், உணவு அரங்கம் என, கண்காட்சி பார்ப்பதற்கு நிறைவாக உள்ளது, திருவிழாக்களில் கிடைக்கும் மகிழ்ச்சி இங்கு கிடைத்தது. - பழனியப்பன், செங்கல்பட்டு கண்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் கார்டூன்களில் மட்டும், பார்த்து மகிழ்ந்த ஒட்டகத்தை, முதல் முறையாக நேரில் பார்ப்பது வியப்பாக உள்ளது. அரங்குகளை பார்க்க, பார்க்க வியப்பாக உள்ளது. குடும்பத்துடன் வார இறுதியை மகிழ்ச்சியாக செலவிட, இந்த கண்காட்சி சிறந்த இடமாக இருந்தது. - சுரேஷ் குடும்பத்தினர், திருவல்லிக்கேணி 'தினமலர்' நாளிதழ் செய்தியை பார்த்து கண்காட்சிக்கு வந்தோம். அரங்கில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில ஆடை ரகங்கள், ஜெய்ப்பூர் வளையல்கள் இடம் பெற்றிருந்தன. அதேபோல், பெண்களுக்கான ஆயத்த ஆடைகள், சுடிதார் மெட்டிரியல், 'ஹேண்ட் பேக்குள்' தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. எங்களுக்கு வேண்டிய அனைத்து அழகு சாதனப் பொருட்களும், ஒரே இடத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. - ஸ்வேதா கல்லுாரி மாணவி, வில்லிவாக்கம் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் கண்காட்சி உள்ளது. இதில், 5,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கினேன். ேஷாபா மற்றும் மெத்தை ஆர்டர் செய்துள்ளோம். கண்காட்சியில் கிடைக்கும் தள்ளுபடி விலையில், 'டெலிவரி' செய்வதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். - நித்யா, தேனாம்பேட்டை