உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி அதிருப்தி! தினமும் தாமதமாக இயக்குவதால் பயணியர் அவதி

புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி அதிருப்தி! தினமும் தாமதமாக இயக்குவதால் பயணியர் அவதி

சென்னை :சென்னை, புறநகர் பகுதிகளான திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு, தேவைக்கு ஏற்ப ரயில் சேவை இல்லாததாலும், தினமும் தாமதமாக இயக்கப்படுவதாலும் பயணியர் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய தடங்களில், தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் செல்லும் ரயில்கள் குறைந்தது, அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக ரயில்கள் தொடர்ந்து தாமதமாக இயக்கப்படுவதால், பயணியர் கடும் அவதியடைகின்றனர். கோயம்பேடு சென்று அங்கிருந்து பேருந்துகளில் செல்வதற்கு கூடுதல் நேரம் ஆகிறது. இதனால், இப்பகுதி பயணியர் ரயில்களை நம்பியே பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆனால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில், ஆங்காங்கே அரை மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தி வைப்பது, வாடிக்கையாகி உள்ளது. இதனால், பயணியர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து, பயணியர் கூறியதாவது:பீக் ஹவர்களில் 10 - 15 நிமிட இடைவெளியில் ரயில் சேவை உள்ளது. பிற வேளைகளில், 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், ரயில்களின் வருகை குறித்து தெளிவான கால அட்டவணையும் நிலையங்களில் இல்லை. ரயில்களின் தாமதம் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படுவதில்லை. மாற்று நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்க செயலர் முருகையன் கூறியதாவது:புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையில், பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி, சென்னை புறநகரில் 30க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பல மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.அதேபோல, கொரோனா பாதிப்பின் போது நிறுத்தப்பட்ட இரண்டு நள்ளிரவு மின்சார ரயில்களின் சேவையும் இன்னும் துவக்கப்படவில்லை. அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்தில், சில நேரங்களில் ஒன்பது பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், நெரிசலில் சிக்கி பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:ரயில்பாதை பராமரிப்பு பணி முடிந்த பின், ரயில்கள் மீண்டும் இயக்கப்படும். 12 பெட்டிகள் உடைய புதிய மின்சார ரயில்கள் வரும்போது, ஒன்பது பெட்டிகள் உடைய பயணியர் ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

17 ரயில் நிலையங்களுக்கு

ஒரே ஒரு காவல் நிலையம்மாநில ரயில்வே காவல் நிலையம், கொருக்குப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் செயல்படுகிறது. இந்த காவல் நிலையத்தின் எல்லை, கொருக்குப்பேட்டையில் துவங்கி, திருவொற்றியூர், எண்ணுார், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் வரை, 62 கி.மீ., துாரத்திற்கு உள்ளது.இந்த காவல் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட 46 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 23 பேர் மட்டுமே உள்ளனர். அதில், காவல் நிலைய எழுத்தர், நீதிமன்ற பணி, விடுப்பில் உள்ளவர் போக, 10க்கும் குறைவானவர்களே தினமும் பணியில் இருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்லும் புறநகர் ரயில் நிலையங்களில், கண்காணிப்பு பணியில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களும் சர்வசாதாரணமாக அரங்கேறுகின்றன.பாதிக்கப்படுவோர், காவல் அவசர உதவி எண் 99625 00500 தொடர்பு கொண்டு தெரிவித்தால், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வருவதற்கே, குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாகிறது. எனவே, கூடுதல் காவல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி