உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் போர் விமானங்கள் வர்ணஜாலம்

மெரினாவில் போர் விமானங்கள் வர்ணஜாலம்

சென்னை,இந்திய விமான படையின் 92ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், நாளை காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, விமான படையின் பிரமாண்ட வான்வெளி சாகசம் நடக்க உள்ளது.இதன் முன்னோட்டமாக, நேற்று காலை மெரினாவில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய வகை ஜெட் விமானங்கள் கொண்டு, நிகழ்ச்சி விறுவிறுப்பாக நிகழ்த்தப்பட்டது.முதலில், வான் சாகசத்திற்கென பிரத்யேகமாக செயல்படும் 'ஆகாஷ் கங்கா' அணியினர், நான்கு ஹெலிகாப்டர்களில் வானில் வட்டமடித்து ஜாலம் காட்டினர். பாராசூட் கொண்டு, கடற்கரையில் குதித்தனர்.தொடர்ந்து, 'ஸ்கை டைவிங்' செய்வதில் பிரபலமாக விளங்கும், 'சூர்யகிரண் ஏரோபாட்டிக்' அணியினரின், நிமிடத்திற்கு நிமிடம் மாறி மாறி செய்த சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.பின், உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட 'சாரங்' ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு துவங்கியது. அதனுடன், 'சேட்டக்' ரகத்தைச் சேர்ந்த நான்கு ஹெலிகாப்டர்களில் 8,000 அடி உயரத்தில் இருந்து வீரர்கள் பாராசூட் பயன்படுத்தி குதித்தனர். கைகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தியடி, அவர்கள் சாகசம் நிகழ்த்தினர்.அதேபோல், 'எம்.ஐ., 70' ரக ஹெலிகாப்டரில் வானில் இருந்து குதித்த கமாண்டோ வீரர்கள், தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பது போன்ற சாகசங்களை செய்து அசத்தினர்.ஒத்திகையாக இருந்தாலும், போர்ச்சூழலில் எப்படி செயல்படுவரோ அதைபோலவே இதில் துடிப்புடன் பங்கேற்றனர்.இவற்றை பார்க்க, ஆயிரக்கணக்கானோர் மெரினாவில் குவிந்தனர். அவர்கள், உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரை ஆங்காங்கே அமர்ந்தபடியும், நின்றபடியும், சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, இந்திய விமானப் படை ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் கூறியதாவது:விமான சாகச நிகழ்ச்சி, மறக்க முடியாத அனுபவமாக மக்களுக்கு இருக்கும். விமான படையில் இளைஞர்கள் சேருவதற்கு ஊக்கமாகவும் இந்நிகழ்ச்சி இருக்கும்.மெரினா கடற்கரையின் பரப்பளவு அதிகம் என்பதால், இந்நிகழ்ச்சியை நடத்துவதில் வசதியாக உள்ளது.இந் நிகழ்ச்சிக்கு வருவோர், உணவு பொருட்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். கடற்கரையில் வீசும் உணவுகளை சாப்பிட பறவைகளுக்கு வரும். அவற்றால் விமானிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, அவற்றுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வசதி அறவே இல்லை

மெரினாவில், நேற்று நடந்த ஒத்திகை நிகழ்ச்சியை, உழைப்பாளர் சிலை முதல், டி.ஜி.பி., அலுவலகம் வரை, நீண்ட வரிசையில் நின்று மக்கள் கண்டுகளித்தனர்.கடற்கரைக்கு உள்ளே ஏராளமான பெண்கள், கர்ப்பிணியர், முதியோர் என பலர், காலை 10:30 மணி முதலே வரத்துவங்கினர். இவர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதியும் ஏற்படுத்தவில்லை. வெயில் கொளுத்தியதால், அவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.பணியில் உள்ள போலீசாரும், குடிநீர் வசதி இல்லாததால், கடற்கரை பகுதிக்கு வருவதற்கு ஆர்வம் காட்டவில்லை. நாளை நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சியில் அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதல் முறையாக

எச்.டி.டி., 40 விமானம்இந்திய விமான படையில், பயிற்சி விமானிகள் கற்றுக் கொள்வதற்காக, எச்.பி.டி., 32 என்ற பயிற்சி விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, அதற்கு பதிலாக, ஹெச்.டி.டி., 40 என்ற பயிற்சி விமானம், முதல் முறையாக நேற்று ஈடுபடுத்தப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்த விமானத்தில் 950 எச்.பி., திறன் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. வான் சாகசத்தில் ஈடுபடுவது, இரவு நேர தாக்குதலை தடுப்பது உள்ளிட்டவற்றுக்காக, இவ்வகை விமானம் செயல்படுகிறது. மணிக்கு 450 கி.மீ., வேகம், 6,000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது.நேற்று நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில், வானில் குட்டி கரணம் அடித்து பட்டாம்பூச்சி போல பறந்த விமானத்தை, பார்வையார்களை உற்சாகப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை