மீண்டும் களைகட்டியது காசிமேடு வரத்து அதிகரிப்பால் மீன் பிரியர்கள் குஷி
காசிமேடு:தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஏப்., 15ம் தேதி துவங்கி கடந்த 14ம் தேதி நள்ளிரவு முடிவுக்கு வந்தது. கடந்த 15ம் தேதி அதிகாலை, 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.இந்த நிலையில், நேற்று 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு பின், நேற்று மக்கள் கூட்டம் அலைமோத, காசிமேடு மீண்டும் விழாக்கோலம் பூண்டது. சின்ன சங்கரா, நெத்திலி, நாக்கு, செருப்பு உள்ளிட்ட மீன் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், பாறை உள்ளிட்ட பெரிய மீன் வகைகளும் விற்பனைக்கு வந்தன. மீன் வரத்து அதிகம் இருந்ததால் விலை சற்று சரிந்தது. நல்ல விலை கிடைத்ததால், மீனவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.இது குறித்து ராயபுரத்தைச் சேர்ந்த கற்பகம், 42, என்பவர் கூறுகையில், ''தடைக்காலத்தால், காசிமேடில் இரு மாதங்களாக மீன் விலை அதிகமாக இருந்தது. தற்போது, அதிக மீன் வரத்தால் பேரம் பேசி வாங்க முடிந்தது. 500 ரூபாய்க்கு வாங்கும் சங்கரா மீன்களை, 200 ரூபாய்க்கு வாங்கி சென்றேன்'' என்றார்.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:படகுகள் கடலுக்கு சென்று ஒரு வாரம் ஆனதால், அதிகளவில் மீன் விற்பனைக்கு வந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, வானகரம், காவாங்கரை, பட்டாளம், பல்லாவரம், பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், உள்ளிட்ட மீன் சந்தைகளில் இருந்தும், ஏராளமான வியாபாரிகள் வந்து மீன் வாங்கி சென்றனர். நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைகிறோம்.அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீன் வரத்து மேலும் அதிகம் இருக்கும். மீன் விலை இந்த வாரத்தை விட குறையும்,'' என்றார்.இது குறித்து, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:தடைக்காலம் முடிந்து, கடலுக்குள் சென்ற படகுகளில், நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. மீன் வரத்தும் அதிகம் இருந்ததால், விலை குறைந்தது. மக்கள் கூட்டமும் அதிகம் இருந்தது.ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை, இன்று பிரதோஷம், நாளை செவ்வாய்க்கிழமை, நாளை மறுநாள் அமாவாசை என்பதால், மக்கள் கூட்டம் அதிகம் இருக்காது என நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நல்ல விலையும் கிடைத்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.