சென்னை: சென்னையில் கடந்தாண்டு போல், இந்த ஆண்டும் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்க துவங்கியுள்ளதால், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடல் ஆமைகள் சென்னையில் பெசன்ட்நகர், நீலாங்கரை, கோவளம், பழவேற்காடு ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு, ஜனவரி முதல் முட்டையிட வரும். நவ., டிச., மாதங்களில், 9.2 கி.மீ., கடல் துாரத்திற்குள் இனபெருக்கத்தில் ஈடுபடும் என்பதால், அந்த பகுதிகளில் சுருக்குமடி வலை போட்டு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த டிச., ஜன., மாதங்களில், எண்ணுார் முதல் மகாபலிபுரம் வரையிலான கடற்கரையில், 400க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இறப்புக்கான காரணம் குறித்து ஆராய்ந்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, வனத்துறை, மீன்வளத்துறை, மாநகராட்சி மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து, டிச., மாதம் முதல் ரோந்து பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரையில், மூன்று நாட்களில், 10 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. வனத்துறை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து, கடற்கரையில் ஆமைகளை புதைத்தனர். கடந்த ஆண்டும், இனப்பெருக்கம் மாதம் துவங்கும்போது ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. அதேபோல், இந்த ஆண்டும் நடப்பதால், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடலில் உள்ள சுற்றுச்சூழல் மாறுதலால் ஆமைகள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. வனத்துறையின் அறிக்கையை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் மீன் பிடிக்க வேண்டும். வலையில் சிக்கினால் சேதம் இல்லாமல் உடனே கடலில் விட வேண்டும் என, அக்டோபர் மாதம் முதல் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஒருங்கிணைந்த ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளுக்கு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அறிக்கை வந்துவிடும். அதன்பின், எதனால் இறப்பு நடக்கிறது என ஆராய்ந்து, அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். - மனிஷ்மீனா, மாவட்ட வன உயிரின காப்பாளர், சென்னை