வாயு கசிவு அறிக்கை தாமதம் தள்ளி போகிறது பள்ளி திறப்பு
திருவொற்றியூர், தனியார் பள்ளியில், வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், மாசு கட்டுபாட்டு வாரியத்தின் ஆய்வு நிறைவடைந்த நிலையில், அறிக்கை வெளியாவதில் தாமதமாவதால், பள்ளி திறப்பு தள்ளிப் போகிறது.திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, 1,970 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.அக்., 25ல், பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக, 45 மாணவியருக்கு மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.மீண்டும் நவ., 4ல், பள்ளி திறக்கப்பட்டது. வாயு கசிவு தொடர்பாக எந்த விளக்கமும் தராமல், பள்ளி திறக்கப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதாக, 10 மாணவியர் வாந்தி, மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மாசு கட்டுபாட்டு வாரியத்தின் காற்று தரம் கண்காணிக்கும் வாகனம், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டு, தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இரண்டாம் கட்ட ஆய்வு நான்கு நாட்கள் தொடர்ந்தது. கண்காணிப்பு பணி முடிந்தாலும், இது தொடர்பான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இதனால், பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிப்போகிறது; நாளை பள்ளி திறக்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது.இதனிடையே, பள்ளி வளாகத்தில், 64 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. புதிதாக, 360 டிகிரி சுழலும் பெரிய அளவிலான மூன்று கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் உள்ள கேமராவில், 'ஆடியோ' பதிவு வசதியும் உள்ளது.பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், '10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது. இருப்பினும், நேரில் பாடம் நடத்துவதற்கு ஈடாகாது. முதற்கட்டமாக, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு துவங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க பரிசீலித்து வருகிறோம்' என்றனர்.