உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடன்பெற வழி தேடும் அதிகாரிகள் பாதை மாறியதா? சி.எம்.டி.ஏ.,வில் நிதி இருப்பு சரிவு

கடன்பெற வழி தேடும் அதிகாரிகள் பாதை மாறியதா? சி.எம்.டி.ஏ.,வில் நிதி இருப்பு சரிவு

சென்னை, மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ., செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகவும், வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்களுக்கு கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் துவங்கி, 50 ஆண்டுகள் கடந்துள்ளது. முழுமை திட்டம் தயாரிப்பது, விரிவான வளர்ச்சி திட்டம் தயாரிப்பது, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது ஆகியவை, இவற்றின் பிரதான பணிகள். கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற மெகா திட்டங்களை சி.எம்.டி.ஏ., செயல்படுத்தியது. தற்போது, உள்ளூர் அளவில் பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், சமுதாய கூடங்கள் அமைப்பது என, சிறிய கட்டமைப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரையிலான, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வடசென்னை வளர்ச்சி திட்டம், 1,000 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டு, 6,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது வரை 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: சி.எம்.டி.ஏ.,வின் முதலாவது முழுமை திட்ட அடிப்படையில் மறைமலை நகர், மணலி துணை நகர திட்டங்கள், கோயம்பேடு சந்தை, கோயம்பேடு பேருந்து நிலையம், சாத்தாங்காடு அங்காடி வளாகம் ஆகியவை செயல்படுத்தப்பட்டன. இதில் மனைகள், கடைகள் விற்பனை செய்த வகையில், 3,500 கோடி ரூபாய் மேல் சி.எம்.டி.ஏ.,வுக்கு நிதி இருப்பு உயர்ந்தது. கட்டட அனுமதி வாயிலாக ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளில் கட்டமைப்பு திட்டங்கள் அதிகரித்த நிலையில், நிதி இருப்பு வேகமாக காலியாகி வருகிறது. புதிய திட்டங்களுக்கு அரசு அனுமதியுடன் கடன் வாயிலாக நிதி திரட்டலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். பாதை மாறியதால் பிரச்னை இதுகுறித்து, அண்ணா பல்கலை நகரமைப்பு துறை முன்னாள் பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் கூறியதாவது: நகர், ஊரமைப்பு சட்டப்படி, முழுமைத் திட்டம், விரிவு வளர்ச்சித் திட்டம், புதிய நகர வளர்ச்சித் திட்டங்களை தயாரிப்பதுதான், சி.எம்.டி.ஏ.,வின் சட்டரீதியான முன்னுரிமை பணிகள். ஆனால், இரண்டு ஆண்டுகளாக முன்னுரிமை பணிகளை விட்டுவிட்டு, சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், வீட்டு வசதி வாரியம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பிற அரசு துறைகள், நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டிய, சிறிய சிறிய பணிகளை அதிகமாக, சி.எம்.டி.ஏ., செயல்படுத்துகிறது. மூன்றாவது முழுமை திட்டம், புதுநகர் திட்டங்கள், விரிவான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் இல்லாத வகையில், பணிகள் தடம் மாறியதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சட்டப்படி வகுக்கப்பட்ட திட்டங்களில், சி.எம்.டி.ஏ., கவனம் செலுத்த அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மக்கள் பணம் மக்களுக்கே! சி.எம்.டி.ஏ.,வின், 50 ஆண்டு காலத்தில் மறைமலை நகர், மணலி துணை நகரங்கள், கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்கள் போன்ற மெகா திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். கடந்த, 2021ல் புதிய அரசு பதவியேற்ற நிலையில், உள்ளூர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், திருமண மண்டபங்கள், நுாலகங்கள், படைப்பகங்கள் போன்றவை கட்டப்பட்டுள்ளன. வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயரில், உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களிடம் இருந்து தான் சி.எம்.டி.ஏ.,வுக்கு நிதி வருகிறது. இதை வைப்பு நிதியாக வைத்திருப்பதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. மக்களின் பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில், உள்ளூர் கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். - கோ.பிரகாஷ், உறுப்பினர் செயலர், சி.எம்.டி.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்