ஐ.ஐ.டி., மெட்ராஸ் வாலிபால் போட்டி பனிமலர் கல்லுாரி அணிகள் அபாரம்
சென்னை, கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் சார்பில், 'ஜிம்மி ஜார்ஜ்' என்ற தலைப்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடந்தது.இதில், ஹிந்துஸ்தான், ஐ.டி.எம்., - பனிமலர், செயின்ட் ஜோசப், ஜேப்பியார், வேளாங்கண்ணி, ஐ.ஐ.டி., மெட்ராஸ் உள்ளிட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதில், மாணவர் பிரிவில் ஐந்து அணிகளும், மாணவியர் பிரிவில் நான்கு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.'லீக்' போட்டியில், மாணவர் பிரிவில் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி, 28 - 26, 25 - 14 என்ற கணக்கில் ஹிந்துஸ்தான் பல்கலை அணியையும், பனிமலர் கல்லுாரி அணி 25 - 21, 29 - 27 என்ற கணக்கில், ஜேப்பியார் கல்லுாரியையும் தோற்கடித்தன.அதேபோல், மாணவியரில் பனிமலர் அணி, 25 - 15, 25 - 10 என்ற கணக்கில், அன்னை வேளாங்கண்ணி அணியை வீழ்த்தியது. செயின்ட் ஜோசப், 25 - 18, 23 - 25, 25 - 17 என்ற கணக்கில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணியை போராடி வென்றது.அனைத்து போட்டிகள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில் மாணவர்களில் பனிமலர் அணி முதலிடத்தையும், ஜேப்பியார், செயின்ட் ஜோசப், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களையும் கைப்பற்றின.மாணவியரில் பனிமலர் கல்லுாரி முதலிடத்தையும், செயின்ட் ஜோசப், வேளாங்கண்ணி மற்றும் ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணிகள், முறையே அடுத்தடுத்த இடங்களையும் வென்றன.வெற்றி பெற்றவர்களுக்கு, ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் நவின் ராஜ் ஜேக்கப், ஐ.ஐ.டி., மெட்ராஸ் மாணவர்களின் டீன் சத்தியநாராயணன், ஸ்போர்ட்ஸ் ஆலோசகர் அருள் பிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.