உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டியில் ரூ.400 கோடியில் அமையுது ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

கிண்டியில் ரூ.400 கோடியில் அமையுது ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ளதுபோல், கிண்டி பேருந்து நிலையத்திலும், 400 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த முனையம் அமைப்பதற்கான முயற்சியில், மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திலும், தாம்பரம் - பிராட்வே பேருந்து வழித்தடத்திலும், கிண்டி முக்கிய மையமாக உள்ளது. கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில், ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணியர் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையம், 13.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. https://x.com/dinamalarweb/status/1948557806329848117இந்நிலையில், கிண்டியில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை அருகில், பெரிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. பிராட்வேயில் அமைவது போல், நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கிண்டி பஸ், ரயில், மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய சந்திப்பாக உருவெடுத்துள்ளது. எனவே, தற்போதுள்ள கிண்டி பேருந்து நிலையத்தை, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்ற உள்ளோம். நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் பிரமாண்ட நடைமேடை மேம்பாலம், எஸ்கலேட்டர்கள், வெளிப்புற நடைபாதைகள், இணைப்பு வாகன வசதி நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதன் திட்ட மதிப்பு, 400 கோடி முதல் 500 கோடி ரூபாய் இருக்கும். கிண்டியை ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றினால், தற்போதுள்ளதை காட்டிலும் கிளாம்பாக்கம், பிராட்வே, கோயம்பேடு, திருவான்மியூர், அண்ணாசதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அதுபோல், கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் வெளியூர் பேருந்துகளை அதிகரிக்கலாம். இதற்கான, சாத்திய கூறுகளை ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் டெண்டர் வெளியிட்டு, ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணி துவங்கப்படும். டெண்டரில் நிறுவனம் தேர்வு செய்து, அடுத்த ஐந்து மாதங்களில் அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவில் இடத்தை பெறுவதில் சிக்கல்

சென்னையில் ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமைக்க, ஜி.எஸ்.டி., சாலை சுரங்கப்பாதை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தில், 3.43 ஏக்கர் நிலத்தில், 3.35 ஏக்கர் நிலம், சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன மல்லீஸ்வர், சென்ன கேசவபெருமாள் கோவிலுக்கு சொந்தமானது. சென்னையில், ஏற்கனவே பல்வேறு அரசு திட்டங்களுக்கு, கோவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு, பக்தர்கள் மட்டுமின்றி, ஹிந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில் இடத்தை வழங்க ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்த திட்டத்துக்கு பிரதானமான நிலத்தை குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் பெறவும், ஹிந்து சமய அறநிலையத்துறையை, லாபத்திற்கான பங்குதாரராக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு விபரம், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதல் பெறும்போது வெளியிடப்படும் என, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி