உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அணுகு சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்த கட்டாயப்படுத்தும் ஐ.டி., நிறுவனங்கள் பைக்குகள் பறிபோவதால் ஊழியர்கள் குற்றச்சாட்டு

அணுகு சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்த கட்டாயப்படுத்தும் ஐ.டி., நிறுவனங்கள் பைக்குகள் பறிபோவதால் ஊழியர்கள் குற்றச்சாட்டு

சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆரில் இயங்கும் சில ஐ.டி., நிறுவனங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை, அணுகு சாலையை ஆக்கிரமித்து நிறுத்த கட்டாயப்படுத்துவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். ஓ.எம்.ஆரில், டைடல் பார்க் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., தொலைவுக்கு, 500க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த, அதே வளாகத்தில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில நிறுவனங்கள், வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. மாறாக, ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அணுகு சாலையை ஆக்கிரமித்து, இரண்டு, மூன்று அடுக்குகளாக நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால், சில பகுதிகளில் அணுகு சாலையையும் சேர்த்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, அணுகு சாலையில் நிறுத்தி செல்லும் இருசக்கர வாகனங்களை திருட, சில கும்பல்கள் சுற்றுகின்றன. ஒரு ஆண்டில், நாவலுார், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், துரைப்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில், அணுகு சாலையில் நிறுத்தப்பட்ட, 120க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக வழக்கு பதிவாகி உள்ளது. இது குறித்து, இருசக்கர வாகனங்களை பறிகொடுத்த ஐ.டி., ஊழியர்கள் கூறியதாவது: ஐ.டி., நிறுவன வளாகத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. நிறுவனத்திடம் கேட்டால், வெளியே நிறுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர். இருசக்கர வாகனங்களை வெளியே நிறுத்தி செல்வதை நோட்டமிடும் திருடர்கள், நாங்கள் பணியில் இருக்கும் போது, அவற்றை திருடி செல்கின்றனர். பெண் ஊழியர்களின் வாகனங்கள், அதிக எண்ணிக்கையில் திருடப்பட்டுள்ளன. போலீஸிடம் புகார் அளித்தால், அவர்கள் கேமரா பதிவுகளை கேட்கின்றனர். ஐ.டி., நிறுவனங்களுக்கு வெளியே, கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படவில்லை. இதனால், எங்கள் வாகனங்களை மீட்பதில் சிக்கல் ஏற்படுகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள், ஐ.டி., நிறுவனங்களிடம் பேசி, எங்கள் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். போலீசார் கூறியதாவது: வாகனம் திருட்டு புகார் கொடுத்தால், உடனே வழக்கு பதிவு செய்து விடுகிறோம். கேமரா பதிவு இருந்தால், எளிதாக கண்டுபிடிக்க முடியும். வணிக நிறுவனங்கள் கேமரா அமைப்பதால், அந்த பகுதியில் திருடு போகும் வாகனங்களை, எளிதாக கண்டுபிடித்து விடுகிறோம். சில ஐ.டி., நிறுவனங்கள், சாலை தெரியும் வகையில் கேமரா அமைப்பதில்லை. நிறுவனத்திடம் வலியுறுத்தினால் அலட்சியமாக இருப்பதுடன், அவர்களுக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் வழியாக, எங்கள் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். நிறுவன ஊழியர்களின் வாகனங்களை, நிறுவனம் தான் பாதுகாக்க வேண்டும். உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், அணுகு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். இவர்கள் அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை