முன் அனுமதி பெறவில்லை என்று சிகிச்சை செலவை வழங்க மறுப்பது சரியல்ல: நுகர்வோர் கோர்ட் அதிரடி
சென்னை:'முன் அனுமதி பெறவில்லை என்று கூறி, மருத்துவ சிகிச்சைக்காக தொகையை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான முழு தொகையையும் வழங்க வேண்டும்' என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த வி.சேகரன் என்பவர் தாக்கல் செய்த மனு: சென்னை துறைமுக ஊழியரான நான், 2001 டிச.,11ல் ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில், 13,600 ரூபாய் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தேன். துறைமுக மருத்துவமனையில், 2016 நவ., 27ல் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சைக்கு சென்றேன். கல்லீரல் பாதிப்பு என, தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.பின், 2017ல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு, 26 லட்சத்து, 2,000 ரூபாய் வசூலித்தனர். மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சைக்கான தொகை கோரி, சென்னை துறைமுக தலைவர், தலைமை மருத்துவ அதிகாரிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், விண்ணப்பத்தை நிராகரித்தனர்.அறுவை சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க வேண்டும். மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு ஐந்து லட்சம் ரூபாயும், வழக்கு செலவுக்கு 50,000 ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, சென்னை துறைமுக நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சிகிச்சைதான்; அவசர சிகிச்சையும் அல்ல என்று கூறி, சிகிச்சைக்கான தொகை கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியாது என, துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.துறைமுக நிர்வாக பரிந்துரையின்படியே, தனியார் மருத்துவமனையில் மனுதாரர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 'கல்லீரல் தானம் செய்ய ஒருவர் தயாராக உள்ளார். உடனே அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேருங்கள்' என, மனுதாரருக்கு, தனியார் மருத்துவமனை தரப்பில், நள்ளிரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மனுதாரர் உடனே மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள, மருத்துவமனையில் உடனே சேருவதை தவிர, மனுதாரருக்கு வேறு வாய்ப்பில்லை. இதுபோன்ற நேரங்களில், துறைமுக நிர்வாகத்திடம், மருத்துவ சிகிச்சைக்காக முன் அனுமதி பெற வேண்டும் எனக்கூறுவது ஏற்புடையதல்ல.மனுதாரர் அரசு ஊழியராக இருந்துள்ளார். பணியில் இருக்கும்போதும், ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு ஏற்படும் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை தர மறுக்க முடியாது. உண்மையிலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளாரா என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, 'டெக்னிக்கல்' காரணங்களை சுட்டிக்காட்டி மறுக்கக்கூடாது. இதுபோன்ற நேரங்களில் உயிர் தான் முக்கியம். முன் அனுமதி பெற வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை. அப்படியிருக்கும்போது, சிகிச்சை தொகை கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது நியாயமற்றது.எனவே, மனுதாரருக்கு, 26 லட்சத்து, 2,000 ரூபாயை, சென்னை துறைமுக நிர்வாகம், மத்திய அரசின் சுகாதார திட்ட கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோர் வழங்க வேண்டும். மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு, 50,000 ரூபாய்; வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.