தேசிய கேரம் சாம்பியன்ஷிப் சென்னை வீரர்கள் அசத்தல்
சென்னை: ம.பி., மாநிலத்தில் நடந்த தேசிய கேரம் போட்டியின் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் பவன்குமார், நவீத் அகமது, தெனினா ஆகியோர், முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். அகில இந்திய கேரம் சங்கம் மற்றும் மத்திய பிரதேச கேரம் சங்கம் இணைந்து நடத்திய, தேசிய அளவில் இருபாலருக்குமான 50வது கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, ம.பி., மாநிலத்தின் குவாலியரில் நடந்தது. இதில் தமிழகம் உட்பட 20 மாநில அணிகள் பங்கேற்றன. போட்டி 'லீக் கம் நாக் - அவுட்' முறையில், ஒற்றையர் மற்றும் குழு பிரிவுகளில் நடந்தது. தமிழகம் சார்பாக போட்டியிட்ட, தேசிய தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சென்னையின் தெனினா, 15, பவன்குமார், 17, இரண்டாவது இடத்தில் இருக்கும் நவீத் அகமது, 17, ஆகியோர், ஒற்றையர் பிரிவில் போட்டியிட்டனர். இதன் ஆண்களுக்கான இறுதி போட்டியில் நவீத் அகமது, பவன்குமார் மோதினர். இதில் பவன்குமார் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தெனினா வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார்.