உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  புதிய வாக்காளர்கள் சேர வாய்ப்பு படிவம் - 6 வினியோகம் துவக்கம்

 புதிய வாக்காளர்கள் சேர வாய்ப்பு படிவம் - 6 வினியோகம் துவக்கம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில், 'படிவம் - 6' வழங்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நவ., 4ல் துவங்கியது. இந்த பணியில், 3,718 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 40.04 லட்சம் வாக்காளர்களில், 39.59 லட்சம் பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்ட படிவங்கள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. கணக்கீட்டு படிவங்கள் வழங்க நாளை கடைசி நாள். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான, படிவம் - 6 வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கும்போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலருக்கு, புதிய வாக்காளர் சேர்க்கைக்கான 'படிவம் - 6' மற்றும் திருத்தம் செய்வதற்கான 'படிவம் - 8' வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியால், புதிய வாக்காளர் சேர்ப்பிற்கான படிவத்தை வழங்க முடியவில்லை. தற்போது, கணக்கீட்டு படிவங்களை பெறும்பணி பெரும்பாலும் முடிந்துவிட்டதால், அவர்கள் வைத்துள்ள புதிய வாக்காளர் சேர்ப்புக்கான படிவத்தை வினியோகிக்க துவக்கியுள்ளனர். வரும் 16ம் தேதிக்கு பின், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை