சென்னை: 'பேரிடர் காலங்களில் நாட்டுப் படகின் இன்ஜின் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வைக்க பாதுகாப்பு கட்டடம் இல்லாததால் இழப்பு ஏற்படுகிறது' என, மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். எண்ணுார் முதல் நயினார் குப்பம் வரை 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அப்பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், புயல், மழைக்காலங்களில் தாங்கள் வைத்திருக்கும் படகின் இன்ஜின், மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கவும், அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்கவும் கட்டடம் மற்றும் மையம் இல்லாததால், புயல், மழை காலங்களில் மீனவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விசைப்படகு வைத்திருப்போருக்கு, காசிமேடு பகுதியில் மீன்பிடி வலை, உபகரணங்கள் பாதுகாப்பு மையம் உள்ளது. நாட்டுப்படகு மீனவர்களுக்கு, இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில், மீன்வளத்துறைக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பயனில்லை என, கவலை தெரிவித்துள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: காசிமேடு துறைமுகத்தில், விசைப்படகுகளில் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்கும், அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்கவும் கட்டட வசதி உள்ளது. ஆனால், நாட்டுப்படகு மீனவர்களுக்கு இந்த வசதி இல்லை. புயலின் போது, பட கில் உள்ள இன்ஜின்களில் மணல் புகுந்துவிடுகிறது. இதனால், இன்ஜினில் பழுது ஏற்பட்டு விடுகிறது. ஒரு இன்ஜின் விலை, 80,000 ரூபாய். அதேபோல, மீன்பிடி வலையின் ஆயுட்காலமும் குறைகிறது. இதனால், புதிய வலை வாங்கும் நிலை ஏற்படுகிறது. சிறிய அளவில் தொழில் செய்யும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு இது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே இதை சரி செய்ய, தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.