உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெளியூர் செல்லும் பயணியர் கவனிக்க...

வெளியூர் செல்லும் பயணியர் கவனிக்க...

சென்னை, பொங்கல் விடுமுறையை ஒட்டி, வெளியூர் செல்லும் பேருந்து பயணியர் செல்ல வேண்டிய நிலையங்கள் குறித்து, விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்துார் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போர், கிளாம்பாக்கம் சென்று பயணிக்க வேண்டும். முன்பதிவு செய்த பயணியருக்கான விரைவு பேருந்துகள் மட்டுமே, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்போரும், முன்பதிவு செய்யாத பயணியரும், விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க இருப்போரும், கோயம்பேடுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்தும், கும்பகோணம் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள், கோயம்பேடில் இருந்தும் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே பொங்கலையொட்டி, கிளாம்பாக்கம், கோயம்பேடு உட்பட ஆறு நிலையங்களுக்கு, இன்று முதல் கூடுதலாக 450 இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

லாரிகளுக்கு தடை

பொங்கல் விடுமுறை கால போக்குவரத்தால் வெளிவட்ட சாலை, சென்னை புறவழிச்சாலை உள்ளிட்ட வழித்தடங்களில் நெரிசல் நிலவும். எனவே, இந்நாட்களில் கன்டெய்னர் லாரிகளை அனுமதித்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், இன்று முதல் பொங்கல் பண்டிகை வரை சென்னைக்குள் கன்டெய்னர் லாரிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சி.எம்.டி.ஏ., கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.சென்னை நோக்கி வரும் லாரிகள், நகருக்கு வெளியில் நிறுத்தி வைக்க உரிய இடவசதி ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ