உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கையாள முடியாமல் மாநகராட்சி திண்டாட்டம்; மலைபோல் குவிவதால் மக்கள் அதிருப்தி

குப்பை கையாள முடியாமல் மாநகராட்சி திண்டாட்டம்; மலைபோல் குவிவதால் மக்கள் அதிருப்தி

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட குளறுபடியால், குப்பையை கையாள முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. சாலையோரங்களில், மேம்பாலங்களை ஒட்டியும் மலை போல் குப்பை குவிக்கப்படுதால், நோய் பரவுமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில், தினசரி 6,300 டன் திடக்கழிவு அகற்றப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக சாலையோரங்களிலும், திறந்தவெளி இடங்களிலும் கொட்டப்பட்டிருந்த குப்பை, கட்டட இடிபாட்டு கழிவு ஆகியவற்றை அகற்ற துாய்மை பணி நடந்தாலும், குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. சமீபத்தில், திரு.வி.க.,நகர், ராயபுரம் மண்டலங்களில் துாய்மை பணியை தனியாருக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த துாய்மை பணியாளர்கள், போராட்டம் நடத்தினர். நீதிமன்றம் தலையீட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவனங்கள் பணியை துவக்கினாலும், ஒப்பந்த பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் சேர மறுத்துவிட்டனர். இதனால், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், குப்பை அகற்றும் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிதாக ஆட்களை எடுக்க முடியாமல், தனியார் நிறுவனமும் திணறி வருகிறது. இதனால், வாரத்திற்கு ஒரு நாள், இரண்டு நாட்கள் மட்டுமே வீடுகள் தோறும் குப்பை எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்படும் குப்பையும், போதிய ஆட்கள் மற்றுமு் வாகனங்கள் இல்லாததால், ஆங்காங்கே சாலையோரம், காலியான இடங்கள், மேம்பால ஓரமான பகுதிகளில் இஷ்டம்போல் கொட்டப்படுகின்றன. அவை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல், அப்படியே முடங்கியுள்ளன. தேவைக்கேற்ப மற்ற மண்டலங்களில் இருந்து துாய்மை பணியாளர்கள், திரு.வி.க.,நகர், ராயபுரம் மண்டலங்களுக்கு மாற்றப்பட்டாலும், பிற மண்டலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குப்பை விவகாரம் சென்னை முழுதும் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால் நோய் பரவுமோ என, மக்கள் பீதி அடைந்துள்ளனர். தினமும் குப்பை அகற்ற ஆட்கள் வராததால், பொதுமக்களும் வேறு வழியின்றி சாலையில் குப்பை கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி திடக்கழிவு துறை அதிகாரிகள் கூறியதாவது: வடசென்னை பகுதிகளில் துாய்மை பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சாலையோரங்களில் குப்பை தேக்கம் இருந்தாலும், தொடர்ச்சியாக அகற்றப்பட்டு தான் வருகிறது. ரோந்து வாகனம் குப்பை இருக்கும் பகுதியை தெரிவித்தாலும் பணியாளர் பற்றாக்குறையால் தொய்வு உள்ளது. பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது, கடந்தாண்டு அபராதம் விதிக்கப்பட்டது. அக்கெடுபிடிகள் தற்போது வேண்டாம் என, மாநகராட்சி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். குறிப்பாக, அபராதம் போன்றவை கைவிடப்பட்டுள்ளன. குற்றச்சாட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாகனம் இல்லாததால் சிரமம்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் காசிமேடு, வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டை, வியாசர்பாடி; ராயபுரம் மண்டலத்தில் பிராட்வே, மண்ணடி, ராயபுரம், சிந்தாதிரிபேட்டை; திரு.வி.க., நகர் மண்டலத்தில், கொளத்துார் பூம்புகார் நகர், பேப்பர் மில்ஸ் சாலை; மாதவரம் மண்டலத்தில் மாதவரம் ரெட்டேரி சந்திப்பு அருகே செம்பியம் சாலை, புழல் விநாயகபுரம், புத்தகரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பை எடுக்கப்படுகிறது. சில இடங்களில் ஏழு நாட்கள் வரை குப்பை அகற்றப்படவில்லை. அண்ணா நகர் மண்டலத்தில் டி.பி.சத்திரம், சேத்துப்பட்டு, நியூ ஆவடி சாலை ஆகிய பகுதிகளில் கொட்டப்படும் குப்பை, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே எடுக்கப்படுகிறது. சோழிங்கநல்லுார் மண்டலத்தில் காரப்பாக்கம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி ஆகிய பகுதிகளில், எப்போதும் அரைகுறையாக குப்பை அகற்றப்படுகிறது. கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கத்தில் குவிக்கப்படும் தேவையில்லாத சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் மூன்று நாட்களாக அகற்றப்படவில்லை. குப்பை தேக்கத்திற்கு முக்கிய காரணம், வாகனங்களில் உடனுக்குடன் குப்பை எடுத்து செல்லாதது தான் என, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி