சென்னை, சென்னை தண்டையார் பேட்டையில், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி பங்கேற்கும் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொது கூட்டதுக்கு அனுமதி வழங்கும்படி, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மேற்கு மண்டல அ.தி.மு.க., செயலர் ஆர்.நித்தியானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனு விபரம்:அ.தி.மு.க., நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்தி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது வழக்கம். வரும் 19ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, ஜன.,9ல் ஆர்.கே.நகர் போலீசில் மனு கொடுத்தேன். அங்கு கூட்டம் நடத்த அனுமதியில்லை எனக்கூறி, அன்றே மனுவை நிராகரித்தார். கடந்தாண்டு ஏப்.,30 மற்றும் டிச.,9ல் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., கூட்டணி கட்சியினர் கூட்டம் நடத்த அனுமதித்துள்ளனர். அரசியல் காரணத்துக்காக, அ.தி.மு.க.,வுக்கு அனுமதி மறுக்கின்றனர். அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, கூட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், 'மனுதாரர் கேட்கும் இடத்தில் பொது கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது' என தெரிவித்து, ஆர்.கே.நகர் தொகுதியில் பொது கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.இதில் மனுதாரர் தரப்பு, ஏ.இ.கோவில் சந்திப்பில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு புதிய மனு கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டதுஇதை பதிவு செய்த நீதிபதி, 'ஆர்.கே.நகர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட பிற இடங்களில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்கக்கூடாது' என, உத்தரவிட்டார்.