காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக, சுற்றுலா இடங்களில் பொதுமக்கள் குவிந்து, மகிழ்ச்சியில் திளைத்தனர். நேற்று காலையிலே வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில், பக்தர்கள் குவிந்து சுவாமியரை தரிசித்தனர்.தவிர, முக்கிய பொழுதுபோக்கிடமான மாமல்லபுரம் கலை சிற்பங்களை காண, ஏராளமானோர் குவிந்தனர். முட்டுக்காடு மற்றும் முதலியார்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாமில், படகு சவாரி செய்யவும் பயணியர் திரண்டதால், சுற்றுலா களைகட்டியது.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் உட்பட 31 வகையான பறவைகளை, குடும்பத்தினர் பார்த்தனர்.தவிர, பொழுதுபோக்கு மையங்களான மால்கள், தீவுத்திடல், வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி, பொங்கல் பண்டிகையை வெகுவாக கொண்டாடினர். வண்டலுாரில் நேற்று மட்டும் 23,000 பேர் வந்துள்ளனர். மூன்று நாட்களில் 63,000 பேர் வந்துள்ளனர்.நேற்று, விடுமுறை தினம் என்பதால், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தவிர, காலையில் இருந்து மதியம் வரை, வாகனங்கள் இயக்கம் குறைந்து முக்கிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாலைக்கு பின், கடற்கரையை நோக்கி பலரும் சென்றதால், வழக்கமான போக்குவரத்து நிலவியது.பொதுமக்கள், கடலில் மூழ்கி இறப்பதை தடுக்கும் வகையில், மெரினா, பெசன்ட் நகர் உட்பட அனைத்து கடற்கரையிலும் குளிக்க தடை விதித்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.பெற்றோருடன் வந்த குழந்தைகள் நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு, குழந்தைகள் கையில் அடையாள அட்டைகள் கட்டி விடப்பட்டன. அதில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், அவர்களின் முகவரி மற்றும் மொபைல் போன் ஆகியவை எழுதப்பட்டிருந்தன.பொங்கல் பண்டிகையை ஒட்டி, நகர் முழுதும் அந்தந்த பகுதிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர, ஆட்டம், பாட்டம் என, கலை நிகழ்ச்சிகள் களைகட்டின.- நமது நிருபர் குழு -