ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய் துறை வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
வேளச்சேரி: நீதிமன்றம் உத்தரவிட்டும், நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றாத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, வேளச்சேரியில், 110 வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டிய வேளச்சேரியில் உள்ள நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாத வருவாய்த்துறையை கண்டித்து, டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில், நேற்று 110 வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தப்பட்டது. பின், அங்குள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் கூடி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இது குறித்து, டான்சி நகர் நலவாழ்வு சங்க செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: வேளச்சேரி, தரமணியில் இருந்து சதுப்பு நிலத்தில் வெள்ளம் வடியும் ஆறு கல்வெட்டு பகுதியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வேளச்சேரி - தரமணி சாலை மூடுகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து வெளியேறும் வெள்ளம், முதலில் டான்சி நகரை பாதிக்கிறது. நீர்வழிப்பாதையில் பூங்கா அமைப்பதை, மாநகராட்சி கைவிட வேண்டும். இனிமேல் மழைக்காலங்களில், எங்கள் பகுதி வெள்ள பாதிப்பில் இருந்து தப்பும் என நினைத்தோம். அதிகாரிகளின் அலட்சியத்தால், அது நடக்கவில்லை. பருவமழையின் போது எங்கள் நகர் பாதிக்கப்பட்டால், அதற்கு வேளச்சேரி, சோழிங்கநல்லுார் தாலுகா அதிகாரிகள் தான் முழு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.