பொது 20 சவரன் நகையுடன் தப்பிய வடமாநில ஊழியர்
கீழ்ப்பாக்கம், நகை பட்டறையில் இருந்த 20 சவரன் நகைகளுடன் தப்பிய வட மாநில ஊழியரை, போலீசார் தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 38. இவர், சென்னை கீழ்ப்பாக்கம், ராஜரத்தினம் தெருவில், தங்க நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.இவரது பட்டறையில், 25க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சைபுல் ரஹ்மன், 35, என்பவர், கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை பட்டறையில் இருந்து வெளியே சென்ற சைபுல் ரஹ்மன், மதியம் வரை வரவில்லை. உரிமையாளர் அருண்குமார் அவரை மொபைல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.சந்தேகமடைந்த அவர், பட்டறையில் உள்ள நகைகளை ஆய்வு செய்ததில், 20 சவரன் நகை மாயமானது தெரிந்தது.கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சைபுல் ரஹ்மன் ஏதோ ஒன்றை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு, கீழ்ப்பாக்கம் போலீசில் அருண்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சைபுல் ரஹ்மனை தேடி வருகின்றனர்.