| ADDED : நவ 24, 2025 03:03 AM
எண்ணுார்: பிளாஸ்டிக் குழாய்க்குள் விழுந்த நாய் குட்டியை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். எண்ணுார், ராமகிருஷ்ணா நகர் சந்திப்பு, சகாயமாதா பள்ளி பின்புறம், மாநகராட்சி பொது கழிப்பறை உள்ளது. இதன் அருகே, இரண்டு அங்குல பிளாஸ்டிக் குழாயில் இருந்து, நேற்று மாலை, நாய் குட்டி கத்தும் சத்தம் கேட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கையை உள்ளே விட்டு நாய் குட்டியை மீட்க முயன்றனர். முடியாததால், பாம்பு பிடிக்கும் கருவி கொண்டு, நாய் குட்டியை உயிருடன் லாவகமாக வெளியே எடுத்து, தண்ணீர் கொடுத்துள்ளனர். பின், நாய் குட்டி தாயிடம் சேர்க்கப்பட்டது. மற்றொரு சம்பவம் ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தனியார் மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மின் இணைப்பு பெட்டிக்கும், சுவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு, நாய்குட்டி ஒன்று சிக்கி உயிருக்கு போராடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நாய் குட்டியை பத்திரமாக மீட்டனர். இரு சம்பவங்களில், நாய் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்களை பகுதிமக்கள் பாராட்டினர்.