ஸ்கூட்டரில் மோதிய பஸ் ராஜஸ்தான் வாலிபர் பலி
அண்ணா நகர்:திருப்பதிக்கு,'பைக்'கில் சென்ற வடமாநில வாலிபர், மாநகர பேருந்து மோதி உயிரிழந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மல்குமார், 31. தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியிலுள்ள ஒரு டீ கடையில் பணிபுரிந்தார்.அதே கடையில் பணிபுரியும் பிரவீன்குமார், 36, என்பவருடன், செகந்திராபாதில் இருந்து திருப்பதிக்கு, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' ஸ்கூட்டரில் சென்றனர். திருப்பதியில் இருந்து, சென்னை கோயம்பேடில் உள்ள நண்பரை பார்க்க வந்தனர். நேற்று அதிகாலை திருமங்கலம், 6வது அவென்யூ, 13வது பிரதான சாலை அருகே சென்ற போது, மாதவரத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் தடம் எண்.121 மாநகர பேருந்து மீது, இவர்களது ஸ்கூட்டர் மோதியுள்ளது.இதில், பின்னால் அமர்ந்து சென்ற நிர்மல்குமாரின் தலை பேருந்தின் பின் சக்கரத்தில் இடித்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகாயமடைந்த பிரவீன்குமாரை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நிர்மல்குமார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரான, புதுச்சேரியைச் சேர்ந்த சங்கர், 52, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.