| ADDED : டிச 10, 2025 05:14 AM
சென்னை: வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையத்துக்கு 'கிளாம்பாக்கம்' என பெயர் சூட்டலாம் என, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா பரிந்துரைத்துள்ளார். சென்னை, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 2023ல் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணியர் வந்து செல்கின்றனர். இவர்கள் புறநகர் மின்சார ரயிலை பயன்படுத்த நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்ற அரசு, புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. பணிகள் முடிந்து சில மாதங்களில் இந்த ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்நிலையில், இதற்கு பெயர் சூட்டுவது குறித்து தெற்கு ரயில்வே, தமிழக அரசிடம் கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ரயில் நிலையத்துக்கு, 'கிளாம்பாக்கம்' என்ற பெயரை சூட்ட, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: இந்த புதிய ரயில் நிலையத்திற்கு, கிளாம்பாக்கம் என பெயர் சூட்டவும், பெயர் பலகையில் எழுத்துக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ளார். இந்த விபரம், வருவாய் துறையில் இருந்து ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அதன் பின் புதிய ரயில் நிலையத்துக்கான பெயர், அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.