உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பழைய கட்டடங்கள் அகற்றம்

வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு பழைய கட்டடங்கள் அகற்றம்

நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கும் பணிகள் துவக்கப்பட்ட நிலையில், அங்குள்ள சேதமடைந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வள்ளுவர் கோட்டம் உள்ளது. 40 ஆண்டுகளாக உள்ள இந்த வள்ளுவர் கோட்டம், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இங்குள்ள கருத்தரங்கு கூடத்தில், 3,500 பேர் அமரும் அளவிற்கு இடவசதி உள்ளது.செய்தித் துறை வாயிலாக, வள்ளுவர் கோட்டத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்ய வாடகைக்கும் விடப்பட்டு இருந்தது.திருவாரூர் தேர் போன்று வள்ளுவர் கோட்டத்திலும், 106 அடி உயரத்தில் பிரமாண்ட கல்லால் ஆன தேரும் உள்ளது. திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளும், அங்குள்ள பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.பல ஆண்டுகளாக புதுப்பிக்க முடியாமல் போனதால், கருத்தரங்கு கூடத்தில் உள்ள படிக்கட்டுகள், மேல் தளம், கீழ்த்தளம் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்து காணப்பட்டன. இதனால், கடந்த 2021ம் ஆண்டு, வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வள்ளுவர் கோட்டத்தில், பொதுப்பணித் துறை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திட்ட பணிகளுக்கான மதிப்பீடு பட்டியல் தயார் ஆனதும், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. கருத்தரங்கு கூடம் இருந்த இடத்தில் நவீன ஒலி, ஒளி காட்சியுடன் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை