உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் நிலம் 31சென்ட் அபகரிப்பு போலி பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை

கோவில் நிலம் 31சென்ட் அபகரிப்பு போலி பட்டாவை ரத்து செய்ய கோரிக்கை

ஞாயிறு, பஞ்ச பாஸ்கர ஸ்தலங்கள் ஐந்தில் திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் முதலாவதாக உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவில், 1,000 ஆண்டு பழமையானது. கோவிலுக்கு சொந்தமாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது.சமீபத்தில் கோவிலுக்கு சொந்தமான 31 சென்ட் நிலத்தை சிலர் போலி பட்டா தயாரித்து விற்றுள்ளனர். இதுகுறித்து அதே கிராமத்தை சேர்ந்த மத்திய அரசின் ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.நாகபூஷணம் என்பவர் கோவில் நிர்வாகத்திற்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தார். புகாரில் குறிப்பிட்ட இடம், கோவிலுக்கு சொந்தமானது என கடந்தாண்டு கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர், பொன்னேரி தாசில்தார் ஆகியோர் தணிக்கை செய்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லைஇதுகுறித்து நாகபூஷணம் கூறியதாவது:கோவிலுக்கு சொந்தமாக இருந்த பல ஏக்கர் நிலம், ஏற்கனவே பறிபோயுள்ளது. தற்போது கோவில் எதிரே உள்ள 31 சென்ட் இடம் போலி பட்டா மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். திருவள்ளுர் மாவட்ட கலெக்டரும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் கோவில் இடங்களை மீட்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் கோவில் கோபுரம் முன் தோண்டிய போது, புதையல் கிடைத்தது. அதைப்பற்றி வெளியே யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்து விட்டனர். அதுகுறித்த புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் மெத்தனமாக செயல்படுவதே கோவில் சொத்து கபளீகரம் ஆவதற்கு காரணமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை