லஞ்சம் கேட்டவழக்கில் துப்புரவு ஆய்வாளருக்கு சிறை
சென்னை, சென்னை மாநகராட்சி இரண்டாவது மண்டலம், 28வது வார்டில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் சிட்டிபாபு. இவர், துப்புரவு ஆய்வாளர் கணேசனின் மேற்பார்வையில் பணியாற்றி வந்தார்.வருகை பதிவேடில் பணிக்கு வரவில்லை என பதிவிடாமல் இருக்கவும், கூடுதல் பணி வழங்காமல் இருக்கவும் சிட்டிபாபுவிடம், கணேசன் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிட்டிபாபு புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, 2010 ஜன., 20ல் லஞ்சப் பணத்தை சிட்டிபாபு கொடுத்த போது, கணேசனை கையும், களவுமாக போலீசார் பிடித்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ப்ரியா முன் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.