உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க.,வினரை தாக்கியதாக வழக்கு அமைச்சர் உட்பட ஏழு பேர் விடுவிப்பு

அ.தி.மு.க.,வினரை தாக்கியதாக வழக்கு அமைச்சர் உட்பட ஏழு பேர் விடுவிப்பு

சென்னை, மாநகராட்சி கூட்டத்தில்,அ.தி.மு.க., கவுன்சிலர்களை தாக்கியதாக, 22 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.கடந்த 2002 ஆக.,29ல், சென்னை மாநகராட்சி கூட்டம், அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது. அப்போது, சென்னை கண்ணப்பர் திடலில் மீன் அங்காடி அமைப்பதற்கான டெண்டர் தொடர்பான விவாதத்தில், அ.தி.மு.க., - எதிர்கட்சியாக இருந்த தி.மு.க., கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

குறுக்கு விசாரணை

வாக்குவாதம் முற்றிய நிலையில், 'மைக்', நாற்காலிகளை துாக்கி வீசி ரகளை நடந்தது, தி.மு.க., கவுன்சிலர்கள் நடத்திய தாக்குதலில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.இது தொடர்பாக, பெரியமேடு போலீசார், அப்போதைய தி.மு.க., கவுன்சிலரான சுப்பிரமணியன், வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சவுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில், கடந்த 2019ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.போலீசார் தரப்பில், 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை, குறுக்கு விசாரணை நடந்தது.

தீர்ப்பு தள்ளிவைப்பு

விசாரணை முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட அப்போதைய கவுன்சிலரும், தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆஜராக, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.அதன்படி, நேற்று காலை 10:30 மணிக்கு நீதிமன்றம் துவங்கியதும், சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அமைச்சர் சுப்பிரமணியன் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராக சற்று தாமதமாகும். அதுவரை தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும்' என்றார். இதை ஏற்ற நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்தார்.மதியம் 12:20 மணிக்கு, அமைச்சர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., - வி.எஸ்.பாபு உள்ளிட்ட ஏழு பேரும், நீதிமன்றத்தில் ஆஜராகினர். மதியம் 12:30 மணிக்கு தீர்ப்பை, நீதிபதி ஜி.ஜெயவேல் பிறப்பித்தார்.

நீதிக்கு கிடைத்த வெற்றி

அப்போது, 'இந்த வழக்கின் சாட்சிகள் பலர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள், போலீசாரால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்' என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கு, 22 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது.நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ''மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள்தான் தாக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சி நடந்ததால், எங்கள் மீதே புகார் அளிக்கப்பட்டது. வழக்கில் நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது நீதிக்கு கிடைத்த வெற்றி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை