அதிகாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்
திரு.வி.க.நகர்:சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை ஒழுங்கபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக, அகலமான சாலையை தேர்வு செய்து, 4க்கு 4 என்ற சதுர அடிக்கு பெயின்ட் அடிக்கப்படுகிறது. அதற்குள் தான் கடைகள் அமைத்து கொள்ள வேண்டும்.அந்த வகையில், திரு.வி.க., நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, நடைபாதை கடைகளை அடையாளப்படுத்தும் விதமாக 4க்கு 4 சதுர அடியில் பெயின்ட் அடித்தனர்.அப்பகுதியைச் சேர்ந்த நடைபாதை வியாபாரிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'லட்சக்கணக்கில் முன்பணம், ஆயிரம்கணக்கில் வாடகை, வரி என செலுத்தியும், கடைக்கு முன் பெயிண்ட் அடித்தால், வாடிக்கையாளர்கள் வாகனங்களை எங்கு நிறுத்துவர். போக்குவரத்து நெரிசல்தான் ஏற்படும்' என்றனர்.உயர் அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அதிகாரிகள் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.