20 அலுவலகங்களை கவனிக்க ஆறே அதிகாரிகள் ஆர்.டி.ஓ., இல்லாமல் அலைச்சலுக்கு ஆளாகும் மக்கள்
சென்னை:சென்னையில், ஆர்.டி.ஓ., என்ற வட்டார போக்குவரத்து அலுவலகம், தென் சென்னை மற்றும் வட சென்னை என பிரிக்கப்பட்டு உள்ளது.வடசென்னை இணை கமிஷனரின் கீழ் தண்டையார்பேட்டை, புளியந்தோப்பு, அயனாவரம், அண்ணா நகர், பூந்தமல்லி, செங்குன்றம், திருவள்ளூர், ரெட்டேரி, அம்பத்துார் என, ஒன்பது ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. 'ஆன்லைன்'
இதில், மூன்று அலுவலகங்களில்தான் ஆர்.டி.ஓ.,க்கள் உள்ளனர். மீதமுள்ள ஆறு அலுவலகங்களை, மூன்று பேர் சேர்த்து பார்க்கின்றனர்.தென்சென்னை இணை கமிஷனரின் கீழ் காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, குன்றத்துார், கே.கே.நகர், வளசரவாக்கம், மந்தைவெளி, திருவான்மியூர், சோழிங்கநல்லுார், ஸ்ரீபெரும்புதுார், மீனம்பாக்கம் என, 11 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இதில், மூன்று அலுவலகங்களில் தான் ஆர்.டி.ஓ.,வினர் உள்ளனர். மீதமுள்ள, எட்டு அலுவலகங்களை, மூன்று பேர் சேர்ந்து பார்க்கின்றனர்.ஒவ்வொரு அலுவலகத்திலும் மாதத்திற்கு, 100க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு, 40க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பழகுனர் உரிமம், 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகின்றன.குறிப்பாக, கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய அலுவலகங்களில், அதிக வாகனப்பதிவு நடக்கும். மொத்தம், 31 சேவைகள் 'ஆன்லைன்' வாயிலாக வழங்கப்படுகின்றன.இருந்தாலும், பன்னாட்டு உரிமம், அனுமதி சீட்டு, புதிய வாகனம் பதிவு, பெயர் மாற்றம், பேட்ஜ், தடையின்மை சான்று, நகல் சான்றுகள் உள்ளிட்ட தேவைகளுக்கு, ஆர்.டி.ஓ., முன், நேரடியாக ஆஜராக வேண்டும். அச்சம்
மேலும், வாகன பதிவு தொடர்பான சில விளக்கங்கள், கையெழுத்துகளை ஆர்.டி.ஓ.,தான் போட வேண்டும்.ஒரு ஆர்.டி.ஓ., மூன்று, நான்கு அலுவலகங்களை சேர்த்து பார்க்கும்போது, பொதுமக்கள் அவருக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.இதில், வாகனங்கள் ஆய்வு, உயர் அதிகாரிகள் கூட்டம், இதர பணி தொடர்பாக ஆர்.டி.ஓ., செல்லும்போது, பொதுமக்கள் பல நாட்கள் அலைய வேண்டி உள்ளது. ஒவ்வொரு அலுவலகமாக சென்று, கோப்புகளை முழுமையாக படித்து கையெழுத்து போட முடியாத நிலை, ஆர்.டி.ஓ.,வினருக்கு ஏற்படுகிறது.இதில், ஏதாவது தவறாக பதிவு செய்தோ, தவறான ஆவணங்களை வைத்தோ கையெழுத்து வாங்கினால், தங்கள் மீது நடவடிக்கை பாயும் என, ஆர்.டி.ஓ.,வினர் அச்சப்படுகின்றனர்.அதேபோல், சட்ட விரோதமாக இயங்கும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
பதவி உயர்வு அளித்தும்பணியிடம் ஒதுக்கவில்லை
கடந்த செப்., 25ம் தேதி, 41 ஆய்வாளர்களுக்கு, ஆர்.டி.ஓ.,வாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் ஏழு பேர், சென்னை அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். ஆனால், ஆர்.டி.ஓ., பதவியிடம் ஒதுக்கவில்லை.சில அலுவலகங்களில், ஒரு ஆய்வாளர் உள்ளார். அவருக்கு ஆர்.டி.ஓ., பணி வழங்கினால், காலியிட ஆய்வாளர் பணியை நிரப்ப ஆள் இல்லாததால், நிர்வாகம் திணறுகிறது.அதேவேளையில், ஒரு ஆர்.டி.ஓ., மட்டும் உள்ள சில அலுவலகங்களில், ஆய்வாளர் பணியையும் சேர்த்து பார்க்கின்றனர்.அதுபோல், சேர்த்து பார்க்க தயாராக உள்ளதாகவும், அப்படி நியமித்ததால் ஆர்.டி.ஓ., பற்றாக்குறை நீங்கும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.