உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கண்ணாடி பிம்பம் போல் அடவு ஸ்ரீநிதி - ஸ்ரீகவி அசத்தல் நடனம்

 கண்ணாடி பிம்பம் போல் அடவு ஸ்ரீநிதி - ஸ்ரீகவி அசத்தல் நடனம்

தி ருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் எப்படியிருக்கும், அதனுள் வீற்றிருக்கும் சுவாமி என்ன அலங்காரத்தில் இருப்பார் என்பதை, மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில், தங்கள் ஒப்பனை மற்றும் அடவு முறைகளில் கச்சிதமாக காண்பித்தனர், வளரும் நாட்டிய கலைஞர்களான ஸ்ரீகவி - ஸ்ரீநிதி. சங்கீர்ண சாபு தாள அலாரிப்புடன், கோவிலின் பிரமாண்ட நடைதிறப்பு, விக்ரஹ வடிவமைப்பு, சுவாமிக்கு பூஜைகள் செய்வதை, தங்கள் நடனத்தில் காட்சியாக மாற்றி, ஆரம்பத்திலே அசரடித்தனர். நாராயணனாக ஸ்ரீநிதியும், லட்சுமியாக ஸ்ரீகவியும் செய்த அபிநயங்களை பார்த்ததுமே, சபைக்கு வந்தோருக்கு தரிசனம் கிடைத்துவிட்டதாகவே எண்ண தோன்றியது. அடுத்து, முக்கிய உருப்படியாக வர்ணத்தை துவக்கினர். 'சகியே' என்ற வர்ணத்தில் தசாவதாரங்களை காட்டிய இருவரும், ராஜகோபசுவாமியின் அழகை வர்ணிக்க துவங்கினர். நாயகி தோழியாகவும், தோழி நாயகியாகவும் மாறி மாறி, சுவாமியை வர்ணித்தனர். சங்கு சக்கரம் ஏந்திய சுவாமியின் கரம் எவ்வளவு மிருதுவாக இருக்கிறது என பார்த்தாயா? என்பதை ஸ்ரீகவி அபிநயம் செய்ய, தோழியாக இருந்த ஸ்ரீநிதி நாயகியாக மாறி சுவாமியின் அலங்காரத்தையும், முக லட்சணத்தையும் குறிப்பிட்டு ஆடினார். இருவரும் மாறி மாறி சண்டையிட்டு கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக, 'பாங்கா மயிலாய்' சரணம் நிகழ்த்தப்பட்டது. காதலன் மீதான மோகத்தையும், தாபத்தையும் அடவு கோர்வைகளில், கண்ணாடி பிம்பம் போல் மாற்றி மாற்றி காட்டி, பார்வையாளர்களுக்கு உச்சபட்ச ரசனையை ஏற்படுத்தினர். நிறைவாக, சூர்யனை மையப்படுத்தி, சூர்யா ராகத்தில் அமைந்த தில்லானாவை, பஞ்சநடை கோர்வைகளுடன் அடுக்கடுக்கான கணக்குகளுடன், மகுடமாய் அமைத்தனர். ஸ்ரீலதா வினோத், பிரீத்தி மகேஷ், வேத கிருஷ்ணராம், முகுந்த் சாம்ராஜ் ஆகியோர் பக்கவாத்தியம் இசைத்து, இவர்களுக்கு ஒளியாய் விளங்கினர். -மா.அன்புக்கரசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்