சென்னை: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, வேளச்சேரியில் உள்ள நீச்சல் குளத்தில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. போட்டியில், எட்டு குரூப் பிரிவுகளில், மாநிலம் முழுதும் இருந்து, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிநாள் போட்டியில், குரூப் - 4 சிறுவர்கள் பிரிவில், எஸ்.எஸ்., ஸ்போர்ட்ஸ் அணியின் சஞ்சித்- - 26 புள்ளிகள், சிறுமியரில் எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணியின் கனிஷ்கா -- 28 புள்ளிகள்; குரூப் - 5 சிறுவர்களில் எஸ்.எஸ்., ஸ்போர்ட்ஸ்- அணியின் யஸ்வந்த் - 23 புள்ளிகள், சிறுமியரில் எஸ்.டி.ஏ.டி., சென்னை அணியின் ரோசிகா -- 26 புள்ளிகள் பெற்று தனிநபர் பட்டங்களை வென்றனர். அதேபோல், குரூப் - 2ல் பங்கேற்ற எஸ்.டி.ஏ.டி., சென்னை வீரர் நிகில், தான் பங்கேற்ற ஐந்து பிரிவுகளிலும் தங்கம் வென்று, தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். குரூப் - 1ல் பங்கேற்ற ஆர்ணாவும், தான் பங்கேற்ற ஐந்து பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார். குரூப் - 3ல் எஸ்.டி.ஏ.டி., டால்பின் வீராங்கனை ஸ்ரீஹரணி தனிநபர் பட்டம் வென்றார். அனைத்து போட்டிள் முடிவில், எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி, 634 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரண்டாமிடத்தை, 347 புள்ளிகளில் ஏசஸ் அகடாமி அணி கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாநில நீச்சல் சங்க தலைவர் திருமாறன் பரிசுகளை வழங்கினர். துணை தலைவர்கள் ராஜு, முனியாண்டி, செயலர் சந்திரசேகரன், பொருளாளர் முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.