அம்பத்துார், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்களின் பராமரிப்பின்மையால், அம்பத்துார் சாலைகளில், தொடர்ந்து திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு, வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலை -மதுரவாயல் புறவழி இணைப்புச் சாலையில், நேற்று முன்தினம், சென்னை குடிநீர் வாரிய குழாய் உடைப்பு காரணமாக, தண்ணீர் வேகமாக வெளியேறியது. 'மாருதி ஸ்விப்ட்' ரக கார் சிக்கியது. அதனால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், சேதமின்றி காரை மீட்டனர்.அதன்பிறகு, சிமென்ட் ஜல்லி கலவை கொட்டி, தற்காலிகமாக பள்ளம் மூடப்பட்டது. போலீசாரின் விசாரணையில், கொரட்டூரில் உள்ள ஆவின் நிறுவனத்திற்கு குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணானது தெரிந்தது. அடிக்கடி ஏற்படும் இந்த குழாய் உடைப்பு பிரச்னையால், அந்த சாலை முழுமையாக சேதமடைந்து, வாகனங்கள் தள்ளாடி செல்லும் நிலை உள்ளதும் தெரிந்தது.பராமரிப்பில்லாத இந்த சாலையை யார் சீரமைப்பது என்பதில் மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை இடையே நிர்வாகப் போட்டி நிலவுகிறது.சென்னை குடிநீர் வாரியமும் இத்துறைகளுடன் கைகோர்த்து, குடிநீர் குழாய் உடைப்பை நிரந்தரமாக சீரமைக்க முன்வராமல், அலட்சியம் காட்டி வருகிறது.இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டிகளும், விபத்து அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.அம்பத்துார் மண்டலம் முழுக்க, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து, சாலை திடீரென உள்வாங்கி வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது.கடந்தாண்டு டிச., 30ம் தேதி, கொரட்டூர் கிழக்கு நிழற்சாலையில், 7 அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதில், 'மாருதி ஸ்விப்ட்' ரக கார் சிக்கியது.அதன் பிறகு, கடந்த மாதம் 4ம் தேதி, கருக்கு பிரதான சாலை சந்திப்பில், 2 அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கி, திடீர் பள்ளம் ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் நிகழவில்லை. மாநகராட்சி நிர்வாகம், மேற்கண்ட பள்ளங்களை தற்காலிகமாக சீரமைத்தது.அம்பத்துார் மண்டலத்தில், இதுபோன்று திடீர் பள்ளங்கள் ஏற்பட காரணம், சென்னை குடிநீர் வாரியத்தின் அலட்சியப் போக்குதான் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மண்டலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டப் பணிகள் நடந்தன. அப்போது, 'கல்நார்' குழாய்கள் பதிக்கப்பட்டன. நாளடைவில் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவன அலுவலகங்கள், கிடங்குகள் ஆகியவை பல மடங்கு அதிகரித்தன.
அவற்றுக்கான கட்டுமானம் மற்றும் அன்றாட பணிக்கான இலகு ரகம் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகி விட்டது. அதனால், மாநகராட்சி சாலை மட்டமும் அதிகரித்தது. இந்நிலையில், 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள், 8 முதல் 10 அடி ஆழத்திற்கு தள்ளப்பட்டன.மேலும், மாநகராட்சியின் உரிய ஆய்வு, பராமரிப்பற்ற நிலையில், புதிதாக அமைக்கப்படும் சாலை மற்றும் கனரக வாகனங்களின் அழுத்தம் தாளாமல், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து, சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்படுகின்றன. விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்க, சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் உரிய ஆய்வு செய்து, பழைய குழாய்களை அகற்றி, புதிய குழாய்களை அமைக்க வேண்டும்.- பி.வி.தமிழ்ச்செல்வன், 49; முகப்பேர்.