உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொதுமக்கள் முன்னிலையில் தாசில்தார்கள். குடுமிப்பிடி .. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிவைப்பு

பொதுமக்கள் முன்னிலையில் தாசில்தார்கள். குடுமிப்பிடி .. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிவைப்பு

வேளச்சேரி: நீதிமன்ற உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற இடத்தில், பொதுமக்கள் முன்னிலையிலேயே, வேளச்சேரி, சோழிங்கநல்லுார் தாசில்தார்கள், கட்டிப்புரளாத வகையில் சண்டை போட்டுக் கொண்டனர். அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலால், அவகாசம் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தள்ளி வைக்கப்பட்டது. சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 1,630 ஏக்கர் பரப்பு கொண்டது. இதையொட்டி, 658 சர்வே எண்ணில், 200 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இந்த இடத்தில் இருந்து, வேளச்சேரி தாலுகா எல்லை துவங்குகிறது. வேளச்சேரி தாலுகா சர்வே எண், 37ல் உள்ள உட் பிரிவை போலியாக பயன்படுத்தி, சோழிங்கநல்லுார் தாலுகாவுக்கு உட்பட்ட சதுப்பு நிலத்தை, பலர் ஆக்கிரமித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. நீர்வழிப் பாதையை மீண்டும் ஆக்கிரமித்ததால், வேளச்சேரி டான்சி நகர் நலச்சங்கத்தினர், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நோட்டீஸ் நீதிமன்ற உத்தரவின்படி, மூன்று மாதங்களுக்கு முன், சோழிங்கநல்லுார் தாசில்தார், ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிக்க, 80 போலீசாருடன், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்றனர். இடிக்க துவங்கியபோது, வேளச்சேரி சர்வே எண்ணில் பட்டா உள்ளது என, ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம் செய்தனர். உடனே, சோழிங்கநல்லுார் தாசில்தார் இலக்கியா, இதுகுறித்து, அங்கு வந்திருந்த வேளச்சேரி தாசில்தார் வனிதாவிடம் கேட்டார். அதற்கு, 'அப்படி பட்டா இருக்காது. அப்படியே அவர்களிடம் இருந்தாலும், கையால் எழுதிய பட்டாவாக இருக்கும்; ஆன்லைன் பட்டா இருக்க வாய்ப்பில்லை' என, வனிதா கூறினார். அதன்பின், ஆன்லைன் பட்டாவை ஆக்கிரமிப்பாளர்கள் நீட்டினர். பட்டாவை ஆய்வு செய்த போது, வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கொடுத்தது தெரிந்தது. வாக்குவாதம் உடனே, 'நீங்களே பட்டா வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பு என மீட்கவும் வந்துவிடுவீர்களா? இப்படி பட்டா இருப் பது குறித்து ஏன் என்னிடம் கூறவில்லை' என, வனிதாவிடம், இலக்கியா காட்டமாக பேசினார். தொடர்ந்து, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். கட்டிப்புரளாத குறையாக, பொதுமக்கள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சில ஆக்கிரமிப்பாளர்கள், இடத்தை காலி செய்ய ஒரு வாரம் கால அவகாசம் கேட்டனர். அதற்கு இலக்கியா, 'ஒரு வாரம் தர முடியாது. மூன்று நாட்கள் தருகிறேன். அதற்குள் வீட்டில் உள்ள பொருட்களை அகற்றிவிடுங்கள்' என்றார். இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றாமல், அனைவரும் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படும் வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: சோழிங்கநல்லுார் தாசில்தார், இந்தாண்டு ஜூலை முதல் பணி செய்கிறார். வி.ஏ.ஓ., மற்றும் அவரின் உதவியாளரின் பேச்சை கேட்டு, வேளச்சேரியில் பட்டா வழங்கியது தெரியாமல், ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றிருக்கிறார். பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். எப்படி இருந்தாலும், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாட்களில் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். எல்லாம் நாடகம் அப்பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது: சோழிங்கநல்லுார், வேளச்சேரி ஆகிய இரண்டு தாசில்தார்களும், ஏற்கனவே இடத்தை அளந்து, எல்லை நிர்ணயம் செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், தற்போது எதுவும் தெரியாதது போல், சம்பவ இடத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி சண்டையிடுவது போல் நாடகமாடுகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
நவ 02, 2025 17:26

பொதுமக்கள் முன்னிலையிலேயே, வேளச்சேரி, சோழிங்கநல்லுார் தாசில்தார்கள், கட்டிப்புரளாத வகையில் சண்டை போட்டுக் கொண்டனர். அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட மோதலால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து அருகில் உள்ள உணவகத்தில் காபி அருந்தி அடுத்த குடுமி பிடி குறித்து முடிவெடுத்தனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை