சென்னை: புதுடில்லியில் நடந்த தேசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியின், பெண்கள் போய்ல் பிரிவில், சென்னை வீராங்கனையர் தங்கப்பதக்கம் வென்றனர். இந்திய வாள்வீச்சு சங்கம் சார்பில், 36வது தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, புதுடில்லியின் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள கே.டி.ஜாதவ் ஹாலில் நடந்தது. இதில், 600க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், குழு மற்றும் தனிப்பிரிவாக போட்டியிட்டனர். போய்ல், இபீ, சப்ரே என, மூன்று வகையான போட்டிகள் நடந்தன. ஜெனிஷா, 19, மரியா அக் ஷிதா, 19, ஜாய் அஷிதா, 18, திவ்யதர்ஷினி, 19, ஆகியோர் அடங்கிய, பெண்கள் போய்ல் குழு பிரிவில் போட்டியிட்ட தமிழக அணி, அரையிறுதியில் சத்தீஸ்கர் அணியை 45 - 35 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் தமிழக அணி, மணிப்பூர் அணியுடன் மோதியது. இதில் அசத்திய தமிழக அணி 45 - 36 என்ற புள்ளிக்கணக்கில் மணிப்பூர் அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த பெண்களுக்கான சப்ரே குழு போட்டியின் அரையிறுதியில் தமிழக அணி, பஞ்சாப் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் பஞ்சாப் அணியிடம் 45 - 33 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக அணி தோற்று, வெண்கலம் கைப்பற்றியது. இதன் ஆண்கள் போய்ல் குழு பிரிவில், தமிழக அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது.