உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை ஸ்டாம்ப் விற்பனை வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

போதை ஸ்டாம்ப் விற்பனை வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

சென்னை, ராயப்பேட்டையில், போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு, 2019 ஜன., 1ல் தகவல் கிடைத்தது. அதன்படி, ராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில் உள்ள அஸ்ரப் ஷெரீப், 26, என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.இதில், மொபைல் போனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 0.4 மி.கிராம் எடையிலான 20 எல்.எஸ்.டி., என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், '2013ல் கோவா சென்ற அஸ்ரப் ஷெரீப், அங்கு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, அவற்றை விற்கும் நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார். கோவாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து சென்னையில் விற்றுள்ளார். போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில், கோவாவில் 2018ல் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்' என்பதும் தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் வந்தது. தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோக் சக்கரவர்த்தி ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'வழக்கில் தொடர்புடைய அஸ்ரப் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி