உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: கொலை முயற்சி வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வியாசர்பாடி மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுதர்சன். இவரது பெற்றோர், கடந்த 2016ம் ஆண்டு ஆக., 3ம் தேதி இரவு, வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இருதயநாதன், 28, என்பவர் சுதர்சனின் பெற்றோரிடம், 'தன்னை ஏன் முறைக்கிறீர்கள்' எனக்கூறி, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த சுதர்சன், தன் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட இருதயநாதனை தடுத்துள்ளார். அப்போது அருகில் கிடந்த கட்டையால், சுதர்சனின் தலையில் இருதயநாதன் அடித்துள்ளார். படுகாயமடைந்த சுதர்சன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, சுதர்சன் அளித்த புகாரில், கொலை முயற்சி, ஆபாசமாக திட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ், இருதயநாதன் மீது வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.தமிழரசி முன் நடந்தது. போலீசார் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இருதயநாதன் மீதான கொலை முயற்சி, ஆபாசமாக திட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, கொலை முயற்சி குற்றச்சாட்டில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், ஆபாசமாக திட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை