உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில்களில் கார்களை ஏற்றி செல்ல 3வது ஆட்டோ ஹப்பிற்கு டெண்டர்

ரயில்களில் கார்களை ஏற்றி செல்ல 3வது ஆட்டோ ஹப்பிற்கு டெண்டர்

சென்னை ரயில்களில் கார்களை பிற இடங்களுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக, தமிழகத்தில் மூன்றாவது 'ஆட்டோ ஹப்' எனும் ஆட்டோ மொபைல் கூட்ஸ் ஷெட் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் அமைய உள்ளது. இதற்கான 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படும் கார் உள்ளிட்ட வாகன தயாரிப்பு முலமாக, ஆண்டுதோறும் பல மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் 35 சதவீத கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள வாகனங்கள், உள்நாட்டில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றை நாட்டின் பிற பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக கன்டெய்னரில் எடுத்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் போக்குவரத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும், சரக்குகளை கையாளுவதை அதிகரிக்க நவீன ஷெட்டுகள் அமைக்கும் பணிகளை, சென்னை ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கார்களை ரயில்களில் அனுப்புவதற்கு ஏதுவாக சென்னை ரயில் கோட்டத்தில், மூன்றாவது 'ரயில் ஆட்டோ ஹப்' எனும் ஆட்டோ மொபைல் ஷெட் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயணியர் கட்டண உயர்வின்றி மாற்று வழிகளில் வருவாயை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விட்டு, வருவாயை அதிகரிப்பு, விரைவு ரயில்கள், ரயில் நிலையங்களில் விளம்பரங்கள் செய்வது, ரயில்வே ஷட்டுகளை நவீனமயமாக்கி சரக்குகளை கையாளுவது அதிகரிக்கச் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை ரயில்வே கோட்டத்தில், ஏற்கனவே வாலாஜா ரோடு, மேல்பாக்கம் ரயில் நிலையங்களில் உள்ள 'ஆட்டோ ஹப்' எனும் ஆட்டோமொபைல் கூட்ஸ்களில் இருந்து கார்கள் பிற இடங்களுக்கு ரயில்களில் கொண்டு செல்லப்படுகிறது. அந்தவகையில் மூன்றாவதாக, சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் 'ஆட்டோ ஹப்' அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனம் தேர்வு செய்து, கார்கள் போன்ற வாகனங்களுக்கான ஷெட்டுகள் அமைப்பது, சரக்கு கையாளுவதற்கான நவீன கருவிகள் அமைப்பது, கூடுதல் இணைப்பு சாலைகள் அமைப்பது உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள உள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து, இந்த நிதியாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை