உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசார் தபால் ஓட்டு போடுவதில்... குளறுபடி! ஓட்டுச்சீட்டு வராததால் அலைக்கழிப்பு

போலீசார் தபால் ஓட்டு போடுவதில்... குளறுபடி! ஓட்டுச்சீட்டு வராததால் அலைக்கழிப்பு

சென்னை :சென்னையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். வரும் லோக்சபா தேர்தலில், தேர்தல் பணி காரணமாக இவர்களுக்கு விடுப்பு கிடைப்பது அரிது. எனவே, அவர்கள் தபால் ஓட்டு போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் நேற்று, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை லோக்சபா தொகுதி தேர்தல் அலுவலகத்தில், போலீசாருக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முறையான முன்னேற்பாடுகள் இல்லாததாலேயே ஓட்டளிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, போலீசார் குற்றம்சாட்டுகின்றனர்.--லோக்சபா தேர்தலையொட்டி, சென்னை மாநகர காவலர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 19,000 பேர், சென்னை மாவட்டத்தில் தபால் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களில், 14,000 பேர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்.இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, சென்னையின் மூன்று தொகுதிகளில், தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் முதல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஏமாற்றம்

தென் சென்னை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம், அடையாறு மண்டல அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களுக்கு ஓட்டுப்பதிவு வசதி செய்யப்பட்டது.இதில், மயிலாடுதுறை, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு, தபால் ஓட்டுக்கான ஆவணங்களை, அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்தல் அலுவலர்கள், சென்னை அதிகாரிகளுக்கு அனுப்பவில்லை.இதனால், நேற்று முன்தினம், சென்னையில் ஓட்டளிக்க வந்த காவலர்கள், 'ஓட்டுச்சீட்டு வரவில்லை' என ஓட்டுப்பதிவு அலுவலர்கள் கூறியதால், ஏமாற்றுடன் திரும்பிச் சென்றனர்.அதேபோல் நேற்றும், விருதுநகர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து, போலீசாருக்கான ஓட்டுச்சீட்டு வரவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டசபை தொகுதியில் வசிப்போரின் விபரமும் வரவில்லை.இதனால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், நேற்றும் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றுடன் திரும்பிச் சென்றனர்.மத்திய சென்னை தொகுதிக்கு ஷெனாய் நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர், கடலுார், கோவை, கரூர், பொள்ளாச்சி உட்பட்ட தொகுதிகளுக்கு, ஓட்டுப்பதிவு நடக்கிறது.முதல் நாளான நேற்று முன்தினம், மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர் தொகுதிகளுக்கு மட்டும் ஓட்டுப்பதிவுகள் நடந்தன. அதில், 400க்கு மேற்பட்டோர் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.நேற்று, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சில தொகுதிகளுக்கு மட்டும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கரூரில் வந்த போலீசாரால் ஓட்டளிக்க முடியவில்லை.'ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட தொகுதிகள்' என தேர்தல் அலுவலர்கள் பிரித்துவைத்த தகவல், போலீசாருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது.தவிர, அவர்களுக்கான 'பேலட்' எனும் ஓட்டுச்சீட்டும் வழங்கப்படாததால், நாளை வரும்படி, தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். இதனால், ஓட்டளிக்க வந்த போலீசார், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதியத்திற்கு பின், அவர்களுக்கு ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இது குறித்து, தபால் ஓட்டளிக்க வந்து ஏமாற்றமடைந்த போலீசார் ஒருவர் கூறியதாவது:வண்ணாரப்பேட்டையில் பணிபுரிகிறேன். திருச்சி தொகுதியில் ஓட்டளிப்பதற்காக, நேற்று முன்தினம், மத்திய சென்னை தேர்தல் அலுவலகத்தில் தபால் ஓட்டளிக்க வந்தேன்.

சிரமம்

எங்களது தொகுதியில் இருந்து ஓட்டுச்சீட்டு வரவில்லை; நாளை வரும்படி கூறினர். உயர் போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, நேற்றும் வந்தேன். மீண்டும் நாளை வரும்படி அலைக்கழிக்கின்றனர்.தபால் ஓட்டில் முறைகேடு நடக்கிறது. தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்ததால், எங்கள் ஊரிலும் எங்களால் ஓட்டு போட முடியாது. இங்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். தேர்தல் நேரத்தில் தினமும் அனுமதி கேட்டு வருவது சிரமம்.தேர்தல் அதிகாரிகள் முறையாக அறிவிப்பு அளிக்கவில்லை. நேற்று, ஆயிரக்கணக்கான போலீசார் ஓட்டுப்பதிவு செய்யாமல் திரும்பினர். இதனால் எங்களது உரிமையும், கடமையும் தடுக்கப்படுகிறது. சில மாவட்டங்கள், வாக்காளர் விபரங்கள் அனுப்ப காலதாமதம் ஆவதால், தபால் ஓட்டளிக்க கூடுதலாக இரண்டு நாள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'வட சென்னையில் 1,090 பேர் தென்சென்னையில் 1,056 பேர், மத்திய சென்னையில் 1,132 பேர், இரு நாட்களாக தபால் ஓட்டு போட்டுள்ளனர்.சில மாவட்டங்களில் இருந்து, தபால் ஓட்டு போடுவதற்கான விபரங்கள் வரவில்லை. நாளையும் ஓட்டுப்பதிவு முடியாவிட்டால், 15ம் தேதி வரை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது' என்றனர்.நடவடிக்கை தேவைஅதிகாரிகளிடம் நேரம் கேட்டு, இரண்டு நாட்களாக, தபால் ஓட்டளிக்க வந்தேன். ஓட்டுப்பதிவு அலுவலர், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தபால் ஓட்டுக்கான சீட்டு வரவில்லை என கூறினார். நாளையும் வராவிட்டால், என்னால் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேல்முருகன், காவலர்,சென்னையில் பணிபுரியும் விருதுநகரைச் சேர்ந்தவர்

'2டி' படிவம் அவசியம்

மத்திய சென்னை தேர்தல் நடத்து அலுவலர்கள் கூறுகையில், 'கடந்த ஆறு நாட்களாக, தபால் ஓட்டளிக்கும் பணிகள் நடக்கின்றன. போலீசாருக்கு நேற்று முன்தினம் துவங்கியது.அவர்களுக்கு 12 'பூத்'களும் அமைத்து, அனைத்து தொகுதிகளிலும் ஓட்டளிக்கும் வகையில் வசதிகள் செய்துள்ளோம். சில போலீசார் முறையாக விண்ணப்பிக்காமல், உரிய படிவத்துடன் வராமல் வாக்குவாதம் செய்கின்றனர்.'தலைமை இடத்தில் இருந்து, எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓட்டுச்சீட்டுகளுக்கு மட்டுமே தபால் ஓட்டு வழங்க முடியும். அந்தந்த மாவட்டங்களில் முறையாக விண்ணப்பிக்காதவர்களுக்கு, ஓட்டுச்சீட்டு இங்கு கிடைக்காது. அந்ததந்த மாவட்டத்தின் வாயிலாக கிடைத்தவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு வழங்கப்படும். இங்கு, '2 டி' படிவத்துடன் வருவோருக்கு மட்டுமே தபால் ஓட்டளிக்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை