| ADDED : நவ 16, 2025 03:00 AM
சென்னை: ''இந்தியர்கள், தங்கள் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது,'' என, தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தெரிவித்தார். 'பிரைம் இந்தியா' எனும் அமைப்பின் சார்பில், 'சிக் ஷா சக்தி - 2025' விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில், கல்வியில் சிறந்த பங்களிப்பை வழங்கிய, கல்வி நிறுவனங்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், முதியோருக்கான 'ஒன் பிங் சீனியர் கேர்' எனும் ஆன்லைன் வசதியை துவக்கி வைத்து, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே பேசியதாவது: மாற்றம் என்பதை ஓர் அரசால் மட்டுமே ஏற்படுத்த முடியாது. சமூக அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இந்தியர்கள், தங்களின் திறனை குறைத்து மதிப்பிட கூடாது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியர்களுக்கான எச்1பி விசா நடைமுறையை கடுமையாக்கினார். அமெரிக்காவுக்கு, இந்தியர்கள் வருவதை தடுக்க முயன்றார். பின், அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை உணர்ந்து, அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, இந்தியர்களின் திறன் எந்த அளவுக்கு உதவியது என்பதை அனைவரும் அறிவர். எனவே, இந்தியர்கள் தங்களின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது. பிரதமர் மோடி வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளார். அதில், இந்தியர்களின் திறன், பங்களிப்பு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.