உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேனாம்பேட்டை - ஆயிரம்விளக்கு வரை...தினம் நெரிசல்!:தீர்வு ஏற்படுத்தாமல் போலீசார் அலட்சியம்

தேனாம்பேட்டை - ஆயிரம்விளக்கு வரை...தினம் நெரிசல்!:தீர்வு ஏற்படுத்தாமல் போலீசார் அலட்சியம்

சென்னை:தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இருந்து, அண்ணா மேம்பாலம் கடந்து ஆயிரம் விளக்கு பகுதி வரை, தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணாமல், போக்குவரத்து போலீசார் அலட்சியமாக இருப்பதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக சுதாகர் நியமிக்கப்பட்ட பின், நெரிசலை குறைக்க, பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களை அடைத்து, சற்று துாரம் தள்ளி சென்று, 'யு டர்ன்' எடுக்கும் நடைமுறையை அமல்படுத்தினார்.இந்த வகையில், அண்ணா சாலையில் நெரிசலை தவிர்க்க, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் யு டர்ன் நடைமுறை கொண்டு வரப்பட்டு, நெரிசல் ஓரளவு குறைந்தது.போலீசார் இருப்பதில்லைசைதாப்பேட்டையில் இருந்து அனைத்து சிக்னல்களையும் எளிதில் கடந்து வரும் வாகனங்கள் அனைத்தும், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு முன் தேங்கி, எந்த நேரமும் அண்ணா மேம்பாலத்தில் வாகனங்கள் நிற்கின்றன.இதனால், தேனாம்பேட்டை சிக்னல் முதல் ஆயிரம் விளக்கு பகுதியை வாகனங்கள் கடப்பதற்கு, 30 நிமிடங்களுக்கு மேலாகிறது.அண்ணா மேம்பாலம் இறக்கத்தில், சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும், சாலையோர கடைகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவது, டாஸ்மாக் கடைக்கு சரக்கு இறக்க வரும் வாகனத்தை நிறுத்துவது, கிரீம்ஸ் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும், அண்ணா மேம்பாலம் முதல் ஒயிட்ஸ் சாலை - அண்ணா சாலை சந்திப்பு வரை, தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போக்குவரத்து போலீசார் இருப்பதால், போக்குவரத்தை சீர் செய்கின்றனர். மதிய நேரங்களில் போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. அப்போது கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதில், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தப்புவதில்லை.இப்பிரச்னைக்கு தீர்வாக, அண்ணா மேம்பாலம் இறக்கத்தில் ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தாமல், போலீசார் முழு நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் சாலைக்கு திரும்ப முடியாமல், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், பாரிமுனை நோக்கி செல்லும் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, கிரீம்ஸ் சாலை செல்லும் வாகனங்கள் தேங்காமல் செல்வதற்கு வசதியாக, மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும். சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.முட்டுக்கட்டைகிரீம்ஸ் சாலை - அண்ணா சாலை சந்திப்பு பகுதிக்கு மிக அருகே 100 மீட்டர் இடைவெளியில், கிரீம்ஸ் சாலையிலிருந்து அண்ணா சாலை வழியாக தேனாம்பேட்டை செல்லும் வாகனங்களுக்கு, 'யு டர்ன்' அனுமதிக்கப்படுகிறது. இதனால், கிரீம்ஸ் சாலையில் இருந்து வெளியேறும் வாகனங்கள், மீண்டும் அண்ணா சாலையில் முட்டுக்கட்டை ஏற்படுத்துகின்றன.இதை தவிர்க்க, யு டர்ன் வசதியை மாற்றியமைக்க வேண்டும். இந்த இடத்தில் யு டர்ன் வசதியை அடைத்து, ஸ்பென்சர் சிக்னல் அருகே உள்ள யு டர்ன் வசதியை பயன்படுத்த வேண்டும். இதன் வாயிலாக அண்ணா சாலையில் நெரிசலை ஓரளவு தவிர்க்க முடியும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாலையை விரிவாக்கினால் சிக்கல் தீரும்ஆயிரம்விளக்கு பகுதியில் எதனால் நெரிசல் ஏற்படுகிறது. அதை தீர்க்க எடுக்க வேண்டியது குறித்து, போலீசார் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர்.சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:அண்ணா மேம்பாலத்தில் இருந்து, ஆயிரம்விளக்கு மசூதி வரை சாலை அகலமாக உள்ளது. அங்கிருந்து, திரு.வி.க., சாலை சந்திப்பு வரை சாலை குறுகி விடுகிறது. இதனாலும், அந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் இருப்பதாலும், வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் தேங்கி நிற்கின்றன.அதுமட்டுமின்றி, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் இருந்து, அண்ணா சாலை வழியாக கிண்டி செல்லும் வாகனங்களுக்கு, ஒயிட்ஸ் சாலை சந்திப்பில், 'யு டர்ன்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கிரீம்ஸ் சாலைக்கும், ஒயிட்ஸ் சாலைக்கும் வெறும், 70 மீட்டர் இடைவெளியிலேயே வாகனங்கள் செல்ல வேண்டி உள்ளது.அண்ணா சாலையில் வாகன நிறுத்தத்திற்கு வசதி இல்லை. டி.வி.எஸ்., முதல் ஜி.பி.,சாலை வரை சாலை அகலமாக உள்ளது. அதேபோல், ஆயிரம்விளக்கு பகுதியிலும் சாலை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.இதனால், அண்ணா சாலையை ஒட்டியுள்ள உட்புற சாலைகளில், நாள் கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி வருகிறோம். தவிர, வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.எனினும், 'பீக் ஹவர்'சில் அண்ணாசாலையில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்படுகிறது. வாகன பெருக்கமும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
நவ 04, 2024 18:22

வாகன ஓட்டிகள் அந்தப் பக்கம் ஓட்டாமல் செல்வதே அந்த பிரச்சனைக்கு தீர்வாகும்.


அப்பாவி
நவ 04, 2024 18:22

வாகன ஓட்டிகள் அந்தப் பக்கம் இட்டாமல் செல்வதே அந்த பிரச்சனைக்கு தீர்வாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை