உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 106 சாலையில் மட்டும் கடைக்கு அனுமதியால் வியாபாரிகள்...அதிருப்தி மக்கள் கூடும் இடங்களிலும் தடை விதித்தது மாநகராட்சி

106 சாலையில் மட்டும் கடைக்கு அனுமதியால் வியாபாரிகள்...அதிருப்தி மக்கள் கூடும் இடங்களிலும் தடை விதித்தது மாநகராட்சி

சென்னையில், 238 சாலைகளில், 106 சாலைகளின் ஓரங்களில் மட்டுமே கடைகளை நடத்த மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. முதல்வர் தொகுதியில், 45 சாலைகள் உட்பட, 132 சாலைகளில் கடைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனை பகுதிகளில் அனுமதி மறுப்பால், சாலையோர வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நாடு முழுதும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபார முறைப்படுத்துதல் சட்டம், 2014ல் மத்திய அரசால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை பின்பற்றி தமிழக அரசு, 2015ல், இதற்கான விதியை உருவாக்கியது.அதன்படி, சென்னை மாநகராட்சியில், தெருவோர நகர வியாபாரிகள் குழு, மாநகராட்சி கமிஷனர் தலைமையில், 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவில், நகர மருத்துவ அதிகாரி, சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர், தலைமை பொறியாளர் உட்பட ஒன்பது பேர் நியமன உறுப்பினர்களாகவும், ஆறு பேர் சாலையோர வியாபாரிகளால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களாகவும் உள்ளனர்.இக்குழுவினர் அவ்வப்போது கூடி, சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள், செய்யக்கூடாத இடங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் அளித்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சியில், 561 சாலைகளும், 35,730 தெருக்களும் உள்ளன. முதற்கட்டமாக, 238 சாலைகள் குழுவின் பரிந்துரைக்கு எடுக்கப்பட்டது.அதில், நிலையான வியாபாரம், நகரும் வியாபாரம், பகுதி நேர வியாபாரம் என்ற அடிப்படையில், ராயபுரம் மண்டலத்தில், 24 இடங்கள், திரு.வி.க.நகரில், 16; மாதவரத்தில், 14 இடங்கள் என, 106 சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், திரு.வி.க.நகரில், 43; ராயபுரத்தில் 22 உள்ளிட்ட 132 சாலைகளில் விற்பனை செய்யக்கூடாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.தெருவோர கடை நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலும், மக்கள் கூட்டம் இல்லாத மற்றும் பேருந்து வழித்தடம் இல்லாத சாலையாக அனுமதிக்கப்பட்டிருப்பதால், கடைகளுக்கு ஆட்கள் வராமல் வியாபாரம் பாதிக்கும் என, சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, சாலையோர வியாபாரியும், நகர விற்பனை குழு உறுப்பினருமான பாலமுருகன் கூறியதாவது:நகர விற்பனை குழுவில் பெரும்பாலும், அதிகாரிகள் தான் உள்ளனர். அவர்கள் சொல்லும் இடங்கள் தான், சாலையோர வியாபாரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.கொளத்துார் தொகுதியில் முதல்வர் வந்து செல்லும் சாலைகள் உட்பட 45 இடங்களில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகள் அமைந்துள்ள சாலைகளில், சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலும் ஏழை மக்கள் தான் வருகின்றனர். அங்கு சாலையோர உணவகம் இல்லையென்றால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.மக்கள் கூடும் இடங்கள், பேருந்து வழித்தட சாலைகள் உள்ளிட்டவை சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், உணவகம், காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரத்தில் ஈடுபடுவோர் அதிகம் பாதிக்கப்படுவர்.அத்துடன், சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத ஒதுக்கீட்டில், சாலையோர வியாபாரத்திற்கு அனுமதியும் தற்போது மறுக்கப்பட்டு வருகிறது. வெயில் காரணமாக, சாலையோர வியாபாரிகள் கடையின் மேல் பந்தல் அமைத்தாலும், அதிகாரிகள் அகற்றி வருவதையும் கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு, காவல் துறையின் பரிந்துரையின்படியே, சாலையோர வியாபாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள், அனுமதிக்கப்படாத இடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஒரே இடத்தில் அப்பகுதியின் அனைத்து சாலையோர வியாபாரிகளும் இருப்பதால், பொதுமக்கள் அவர்களை தேடி செல்வர். அதனால், சாலையோர வியாபாரம் பாதிக்கப்படாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவுன்சிலர்கள் ஆதிக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில், 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே, மாநகராட்சி தற்போது அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், இரவு நேர பிரியாணி, டிபன் கடைகள் என, 15,000க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள், உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருக்கு, மாதாந்தர வாடகை என்ற பெயரில் 'கமிஷன்' கொடுக்கப்பட்டு, அதிகாலை வரை இயங்கி வருகிறது.

கவுன்சிலர்கள் ஆதிக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில், 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே, மாநகராட்சி தற்போது அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், இரவு நேர பிரியாணி, டிபன் கடைகள் என, 15,000க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள், உள்ளூர் கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் போலீசாருக்கு, மாதாந்தர வாடகை என்ற பெயரில் 'கமிஷன்' கொடுக்கப்பட்டு, அதிகாலை வரை இயங்கி வருகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMESH
ஏப் 24, 2025 18:57

கமிஷன் கடைகள் ஏராளம்...அரசு அனுமதி பெறாமல்..... அனைத்து அரசு அதிகாரிகளும்....ஆளுங் கட்சி நபர்களும் உடந்தை இல்லாமல் இது நடக்குமா?


Jagan (Proud Sangi )
ஏப் 24, 2025 18:14

மெயின் ரோடுகளில் வண்டி கடைகள் மற்றும் பெரிய கடைகளின் ஆக்கிரமிப்பு அகற்ற பட வேண்டும். பக்க சாலை மற்றும் சந்துகளில் கடைகள் ஓகே.


Muralidharan S
ஏப் 24, 2025 12:06

இந்த விதிமுறைகள் சட்டத்தை மீறி நடைபாதையில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக ஆக்ரமிப்பு செய்தவர்களுக்கு எதிரானது என்று யாராவது நினைத்தால்.. பாவம் அப்பாவிகள் என்றுதான் நினைக்கத்தோன்றும். இது சட்டத்தை மீறுபவர்களிடம் இருந்து மாமூல் வசூல் செய்பவர்களுக்கானது.. இங்கே எதுவும் மாறாது.. சாதாரண மக்களும் சேர்ந்துதான் அவரவர் வசதிக்கு / அளவிற்கு ஏற்ப குடிசைவாசிகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஆக்ரமிப்பு செய்கிறார்கள்.. யாருக்கு இங்கே இருக்குறது தட்டி கேட்க.. சென்னையில் பெரும்பாலான ரயில்வே பார்டர் சாலைகள் குடிசைவாசிகளால் அக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின்சார வசதி, தண்ணீர் வசதி இவை அனைத்தும் மாநரகாட்சி செய்து தந்து இருக்கிறது.. ஒவ்வொரு குடிசை வாசிகளின் வீட்டிலும் இல்லாத மின்சார உபகரணங்கள் இல்லை எனலாம்.. சில குடிசைவாசிகள் மின்சார வாகனங்களை கூட வைத்து இருக்கிறார்கள்.. அக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற முடியாமல் சென்னை ரங்கராஜபுரம் பகுதியில் மேம்பாலம் கூட வடிவமைப்பு மாற்றி குடிசைகளை அப்புறப்படுத்தாமல் கொண்டு சென்று உள்ளார்கள்.. அவ்வளவு வசதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு.. காஷ்மீரை அக்கிரமித்து இருக்கும் பாகிஸ்தானியர்கள் போல இங்கே பொது இடங்களையும் சாதாரண பொது மக்கள் ஆக்ரமித்து வீடே கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.. இதை எல்லாம் யாரும் கேட்கமுடியாது.. இதுதான் திராவிஷ மாடல்..


சமீபத்திய செய்தி