உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேட்பாரற்ற வாகனம்; தொங்கும் கேபிள் அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் தடாலடி

கேட்பாரற்ற வாகனம்; தொங்கும் கேபிள் அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் தடாலடி

சென்னை, சென்னை மாநகராட்சியில், நடைபாதைகளை சுத்தம் செய்யும் 'மெகா துாய்மை' பணியில் ஒரே நாளில், 1.65 லட்சம் கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டதுடன், பயன்பாடின்றி சாலையில் நீண்ட நாட்களாக போடப்பட்டிருந்த இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை, பேருந்து நிறுத்தம், பூங்காக்கள் என்ற அடிப்படையில், இரவு நேரங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கை

அதைத்தொடர்ந்து, சாலைகள், நடைபாதைகளை சுத்தம் செய்யும் 'மெகா துாய்மை' பணி, நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மெகா துாய்மை பணியில், பயன்பாடு இல்லாத மின் மற்றும் இண்டர்நெட் கேபிள்கள் அகற்றப்பட்டு வருகிறது. அத்துடன், அனுமதி பெறாத இண்டர்நெட், தொலைக்காட்சி கேபிள்கள் கண்டறியப்பட்டு அகற்றப்படுகிறது.நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ள சாலையோர கடைகள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கைப்பிடி

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சாலையை தேர்வு செய்து, அச்சாலையில் உள்ள குப்பை, கழிவு உட்பட, மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்தும் அகற்றப்படும்.நடைபாதைகள் சேதமடைந்திருந்தால், அதை மதிப்பீடு செய்து சரி செய்யப்படும்.சாலையின் சம உயர அளவில் அமைந்துள்ள நடைபாதைகள் கணக்கிடப்பட்டு, பாதசாரிகள் பாதுகாப்பிற்காக, அவ்விடங்களில், 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல்' கைப்பிடிகள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.1.65 லட்சம் கிலோ குப்பை நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டையில் சூளைமேடு நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை; அண்ணா நகரில் கங்காதீஸ்வரர் கோவில் சாலை; அடையாறு டி.சி.எஸ்.தினகரன் சாலை உட்பட, சென்னை முழுதும், 37 சாலைகள், 79 நடைபாதைகள் என, 40.80 கி.மீ., மெகா துாய்மைப்பணி நடந்தது. இதில், 446 பணியாளர்கள், 116 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.இரவு முழுதும் நடந்த துாய்மை பணியில், 40,790 கிலோ குப்பை; ஒரு லட்சத்து, 20,930 கிலோ கட்டட கழிவு அகற்றப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கைவிடப்பட்டு இருந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை