தமிழகத்தின் 'துாங்கா நகரம்' என்ற சிறப்பை பெற்றது மதுரை மாநகர். தற்போது சென்னை மாநகரமும் இரவின் கண்களில் ஒளிரத் துவங்கி உள்ளன. அண்ணா நகர், திருமங்கலம், அண்ணா சாலை, புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், கிண்டி உட்பட பல பகுதிகள் விடிய விடிய இயங்கி வருகின்றன. குறிப்பாக, அண்ணா நகரில் இயங்கும் இரவு நேர உணவகங்கள், சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது.சென்னையை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான ஐ.டி., நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படை செயல்படுகின்றன. இதனால், இங்கு இரவு நேரம், மேற்குறிப்பிட்ட நாடுகளில் பகல் என்பதால், இரவில் உழைப்பும் பகலில் ஓய்வும் என்பதாக மாறியது.நவீன காலத்தில் இரவு பகல் பாராமல் படித்துக் கொண்டும், வேலை செய்தும் வருகின்றனர்.இளம் மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், குடும்பங்கள் மற்றும் ஓய்வெடுக்கும் நண்பர்கள் அனைவரும் நள்ளிரவில் 'புட் ஸ்ட்ரீட்ஸ்'களுக்கு செல்லுவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர். அண்ணா நகர்
அந்தவகையில், திருமங்கலம் அருகில், அண்ணாநகர் 2வது அவென்யூவில், 'கோரா புட் ஸ்ட்ரீட்' என்ற ஒரே கூரையின் கீழ், பல்வேறு உணவகங்கள் செயல்படுகின்றன.இங்கு, பீட்சா, பிர்ரியா டகோஸ், நுாடுல்ஸ், மோமோஸ் மற்றும் போபா டீ முதல் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் ப்ரை, ஐஸ்கிரீம் வரை, பாரம்பரிய தென்னிந்திய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புகழ்பெற்ற எல்லா உணவுகளும் கிடைக்கின்றன.ஒரே கூரையின் கீழ், 40க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களும் மற்றும் ஆயிரக்கணக்கான விதவிதமான உணவுகளும் கிடைக்கின்றன.நவீன அலங்காரம், வசதியான சாவடிகள் அல்லது வெளிப்புற இருக்கைகள் உள்ளிட்ட மக்களின் விருப்பதிற்குகேற்ப இருப்பதால், சென்னையில் உணவு பிரியர்களின் சொர்க்கமாகவே செயல்படுகிறது.இதுகுறித்து, 'கேரா புட்ஸ்' நிர்வாகத்தினர் கூறியதாவது:கோரா புட்ஸ் நிர்வாகம், அரசின் அனுமதி பெற்று செயல்படுகிறது. இங்கு, உணவு பிரியர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. அரசின் அனுமதியுடன் செயல்படுவதால், நெறிமுறைகளுடன் இயக்கப்படுகிறது. அதிகாலை 4:00 - 5:00 மணி வரை விற்பனை செய்கிறோம்.பாதுகாப்பு நடவடிக்கையாக, உணவகங்களில், 5 லட்சம் ரூபாய் செலவில், 60க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அவென்யூவில் மட்டும், 12 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. இதனால், விபத்து, திருட்டு உள்ளிட்ட கண்காணிக்கவும் உதவுகிறது. பெண்களுக்கு பல்வித பாதுகாப்பு அம்சங்கள், சிறுவர்களுக்கு விளையாட்டு மையங்களும் உள்ளன. அதேபோல், நடைபாதைகள் துாய்மையாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.அவ்வப்போது, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஆய்வு செய்கின்றனர்.தவிர, வாகனகள் பார்க்கிங் செய்யும் இடமான இரண்டாவது அவென்யூவில், சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிப்பதால், அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.தினமும், 1,000 - 1,500 முதல் வார இறுதி நாட்களில், 3,000 - 4,000 வரை மக்கள் வருகின்றனர். இப்பகுதி சென்னையில் ஒரு லேண்ட்மார்க்காவும் மாறி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். அண்ணா சாலை
அண்ணாசாலை, திருவல்லிக்கேணி பெரிய மசூதி அருகே மூன்று இரவு நேர உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான திரையரங்கங்கள் உள்ளதால், பெண்கள் மற்றும் குடும்பத்துடன் வருவோருக்கு போதிய பாதுகாப்பு இடமாக உள்ளது. நள்ளிரவில் இக்கடைகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.வார இறுதி நாட்களில் அரை மணி நேரம் வரை காத்திருந்து உணவருந்தி செல்கின்றனர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் செல்லும் பிரதான சாலை என்பதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது. தி.நகர், பெரியார் சாலை, போரூர் சுந்தர முதலி தெருவில் 'டெக்ஸ்சஸ் ரெஸ்டோ பார்' எனும் உணவகம் இரவு 12:00 மணி வரை செயல்பட்டு வருகிறது. அதிகம் வி.ஐ.பிக்கள்., பிரபலங்கள் வந்து செல்லும் உணவகமாக உள்ளன. அசைவம் மற்றும் சைவம் என இரண்டு வகைகளில் வித்தியாசமான 'ரெசிபி' வகைகளுடன் உணவு பரிமாறப்படுகிறது நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் சாலையில் கடந்த ஆண்டில் சிறிய இரவு நேர கடைகள் திறக்கப்பட்டன. இந்த பகுதியில் இளைஞர்கள் அதிகம் பேர் வந்து, இரவு வாழ்க்கையை மிகவும் துடிப்பானதாக மாற்றி வருகின்றனர்.வாகனங்களின் இரைச்சல் இல்லாத அமைதியான சூழலை விரும்புவோர் இரவு நேர கடைகளை நோக்கி தினமும் படையெடுக்கின்றனர். அதிகாலை உணவகங்கள்
புளியந்தோப்பு பகுதியில் அதிகாலை 2:00 மணியளவில் துவங்கும் பிரியாணி கடைகள் இரவு 11:00 மணி வரையில் நடைபெறும். புளியந்தோப்பு பகுதியில் செயல்படும் பிரியாணி கடைகளில் அலைமோதும் கூட்டம் போன்று வேறு எங்கும் காண முடியாது. பைக்குகள் நிறுத்தக்கூட இடம் இருக்காது திருவொற்றியூர் ரயில்வே கேட் பகுதியில் அதிகாலை 3:00 மணி வரையில் தேநீர், வடை கடை செயல்படும். அதன் அருகில் பிரெட் ஆம்லட் கடை, பெட்டி கடையும் நள்ளிரவு வரையில் செயல்படுகிறது.இந்த பகுதியில் சுழற்சி முறையில் நடக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இரவு வேலை பார்த்து நள்ளிரவில் வீடு திரும்புவர்களுக்கு இந்த கடைகள் மிகவும் உதவுகின்றன. மணலி பகுதியிலும் தொழிற்சாலைகள் அதிகம், ஆண்டாள் குப்பத்தில் விடிய, விடிய தேநீர், சமோசா, வடை கடை செயல்பட்டு வருகிறது.விதவிதமான உணவு பதார்த்தங்களுக்காக கடைகளை நோக்கி இன்றைய இளைஞர் பட்டாளம் படையெடுப்பதால், நள்ளிரவிலும் பல பகுதிகள் இரவில் மிளிர்ந்து வருகின்றன.- நமது நிருபர் குழு -