| ADDED : ஜன 25, 2024 12:51 AM
சென்னை, விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே துவங்கப்பட்ட, சுரங்கப்பாதை பணிகள் முடங்கி உள்ளதால், அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக, விம்கோ நகர் ரயில் நிலையம் இருக்கிறது. இங்குள்ள ரயில் பாதை குடியிருப்புகளுக்கு நடுவே இருக்கிறது. இந்த பகுதியில் இருந்த ரயில்வே கேட் வாயிலாக தான், இப்பகுதியினர் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மாற்றாக, புதிய சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று, ஐந்து கோடி ரூபாயில் புதிய சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கியது. ஆனால், பணிகள் முடங்கியுள்ளதால், அவதி நிலை தொடர்கிறது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜன., மாதத்தில் சுரங்கப்பாதை பணிகள் துவங்கின. தொடர்மழைக்கு பின், பணிகள் பல மாதங்களாக முடங்கி உள்ளன. ஏற்கனவே தோண்டிய பள்ளத்திலும் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே, பயணியரின் நலனை கருத்தில் கொண்டு இங்குள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.